விநாயகர் சதுர்த்தி.. அருகம்புல்லும் எருக்கம்பூ மாலையும்.. பிள்ளையார் ரொம்ப சிம்பிள்

கணபதிக்கு ஆள் உயர மாலை வேண்டாம். ஒரு கைப்பிடி அருகம்புல் போதும். அருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். வீடுகளில் அருகை சாணம் அல்லது மஞ்சளில் நட்டு வைத்து வணங்குவார்கள்.

Aug 29, 2024 - 17:32
 0
விநாயகர் சதுர்த்தி.. அருகம்புல்லும் எருக்கம்பூ மாலையும்.. பிள்ளையார் ரொம்ப சிம்பிள்
vinayagar chathurthi 2024

எளிமையான கடவுள் விநாயகருக்கு மூஞ்சூறு வாகனம் போல அவர் அணிந்து கொள்ளும் மாலையும் எளிமையானது. அருகம்புல்லும் எருக்கம் பூ மாலையும் 
விநாயகருக்கு போதுமானது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. முழு முதற் கடவுளான விநாயகர் அவதரித்த நாளே விநாயகர் சதுர்த்தி, கணேஷ் சதுர்த்தி என்ற பெயர்களால் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி( சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. புகழ் பெற்ற கற்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா  கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 

வழக்கம்போல இந்தாண்டும் விநாயகர் சதர்த்திக்காக விநாயகர் சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், விநாயகர் சதுர்த்திக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளிலும் அந்தந்த மாநில காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சிலைகள் வைக்கவும் கரைக்கவும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. 

வீட்டில் வைத்து வணங்கும் விநாயகருக்கு எருக்கம் பூ மாலை, அருகம்புல் மாலை அணிவிப்பது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. விநாயகருக்கு மிகவும் உகந்த அர்ச்சனை பொருட்களாக எருக்கம் பூவும், அருகம்புல்லும் உள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு தேவையான நைவேந்தியங்கள் படைக்க வேண்டும். விநாயகர் சிலையை அல்லது விநாயகர் படத்தின் முன்பு வாழை இலையை வைத்து பூ பழங்களை படைக்க வேண்டும்.

அதிக அளவில் யாதவர்கள் வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வாங்கி வைத்தாலே போதும்.விநாயகருக்கு பிடித்தமான உணவாக கொழுக்கட்டையும், சுண்டலும் முதன்மையானதாக உள்ளது.கொழுக்கட்டை, சுண்டல் கட்டாயமாக இடம் பெற வேண்டும். இதனுடன் சேர்ந்து லட்டு, அவல், பொரி, மோதகம், பால், சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை படைக்கலாம்.எதுவுமே படைக்க முடியாவிட்டாலும் பால், பழம், தேன்,கொழுக்கட்டை வைத்தாலே போதும்.

விநாயகர் மிக எளிமையாக காட்சி தருவதுடன் மட்டுமில்லாமல் மிகவும் எளிமையான கடவுளாகவும் போற்றப்படுகிறார். இதனால், பெரியளவில் விநாயகர் சதுர்த்திக்கு அவருக்கு பூஜைகள் செய்யாவிட்டாலும், பக்தர்கள் தங்களால் இயன்றளவு நைவேத்தியங்களை இட்டு வழிபாடு செய்தாலே போதும். எந்தவொரு படையலும் இட்டு வழிபாடு செய்ய இயலாத பக்தர்கள் விநாயகரை வணங்கினாலே போதும்.

கணபதியின் பூஜைக்கு உரியதானது அருகம்புல். தூர்வை, மேகாரி, பதம், மூதண்டம் என பல பெயர்களால் சிறப்பிக்கப்படும் அருகம்புல் கணநாதருக்கு மட்டும் அல்ல, மூலிகையாக எடுத்துக்கொண்டால் நமக்கும் நன்மை தரும். 

இதற்கு ஒரு புராண கதையே உள்ளது. ஜ்வாலாசுரன் என்ற அனலன் வேண்டாத சேர்க்கையினால் தீயவனாகி சாபம் பெற்றான். இதனால் மூர்க்கனாக மாறி தேவர்களை இம்சித்து வந்தான். வரங்கள் பல பெற்றதாலும், பிறப்பிலேயே அவனது உடல் பெரும் அனலைக் கக்கியதால் அவனுக்கு அருகில் கூட யாரும் செல்ல முடியவில்லை. செல்பவர்களை எல்லாம் சாம்பலாக்கினான் ஜ்வாலாசுரன். என்ன செய்வது என்று புரியாத தேவர்கள் பிள்ளையாரை வேண்டி அவரது உதவியை நாடினர். கணநாதரும் அவனை ஒழித்து தேவர்களை காக்க அவனிருக்கும் இடம் சென்றார். அங்கு கணபதியின் கணங்கள் எல்லாம் வெம்மை தாங்காமல் ஓலமிட்டன. இதனால் கணபதியின் கோபம் எல்லை கடந்தது. ஜ்வாலாசுரனை பெரும் அனல் வடிவம் கொண்டு கணபதி தாக்கினார்.

அந்த அசுரன் ஓய்ந்துபோன தருணத்தில் அவனைப் பிடித்து விழுங்கி விட்டார் கணபதி. உஷ்ணம் தாங்காத கணநாதர் சக்தியை எண்ணி வணங்கினார். தேவர்கள் யாவரும் கணநாதரை குளிர்விக்கும் வகையில் என்ன என்னவோ செய்துபார்த்தார்கள். எதிலுமே தீ தணியவில்லை. சப்த ரிஷிகள் எனப்படும் அத்திரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் ஆகிய எழுவரும் சேர்ந்து ஒரு சாண் அளவுள்ள இருபத்தொரு அருகம்புற்களைக் கொண்டு வந்து கணபதியின் தலையில் வைத்தனர். இதனால் கணபதியின் உடல் குளிர்ந்து, வயிற்றில் இருந்த அனல் தணிந்தது. அருகம்புல்லினால் வெப்பம் தணிந்து குளிர்ந்த பிள்ளையார் மகிழ்ந்தார். 

அதுமுதல் தனக்கு பிடித்த அருகம்புல்லைக் கொண்டு யார் பூஜை செய்தாலும் அவர்களுக்கு வேண்டிய வரம் தருவேன் என்று கூறினாராம் பிள்ளையார். சந்திர திசை, கேது திசை நடப்பவர்கள் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியிலும், விநாயகர், சதுர்த்தியிலும் தூர்வாஷ்டமியிலும் பிள்ளையாரை அருகம்புல் சாற்றி வழிபட்டால் அனைத்துவிதமான தோஷங்களும் விலகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow