விநாயகர் சதுர்த்தி.. கணபதியே வருவாய்.. யானை முகத்தோனின் 12 அவதாரங்களும் நோக்கமும்

விநாயகர் 12 அவதாரங்கள் எடுத்ததாக விநாயக புராணம் என்ற நூல் கூறுகிறது. இந்தவகையில் விநாயரை வணங்கும்போது இவரின் 12 பெயர்களை கூறி வழிபட்டால் 12 அவதாரங்களின் பலன் கிடைக்கும்.

Aug 28, 2024 - 07:24
Aug 29, 2024 - 10:29
 0
விநாயகர் சதுர்த்தி.. கணபதியே வருவாய்.. யானை முகத்தோனின் 12 அவதாரங்களும்  நோக்கமும்
vinayagar chathuthi 2024

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 7ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல ஊர்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் செய்து தயாராக வைத்துள்ளனர். வீதிகள் தோறும் விநாயகர் சிலைகளை வைத்து 10 நாட்கள் வழிபட்டு ஆறு குளங்களில் விசர்ஜனம் செய்வார்கள். விநாயகருக்கு பல பெயர்கள் உள்ளன. விநாயகர் அசுரர்கள் அழிக்க எடுத்த அவதாரங்களை வைத்து அவரை அந்தந்த பெயர்களில் அழைக்கின்றனர் பக்தர்கள். விநாயகரின் 12 அவதாரங்களைப்பற்றி பார்ப்போம். 


கடவுளுக்கெல்லாம் மேலான தலைமைக் கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குகிறார். இடர்களைப் போக்கி வழிகாட்டுபவர் என்பதால் விக்னேஸ்வரன் என்று பெயர் பெற்றார்.  விநாயகர் ஒரு கொம்பு (தந்தம்), இரு செவிகள், மூன்று திருக்கண்கள், நான்கு திருத்தோள்கள், ஐந்து திருக்கரங்கள், ஆறுஎழுத்து மந்திரம் கொண்டவர். அவரை வழிபட்டால் பிறவிகள் நீங்கும். எண்திசைகளும் புகழும். நவமணிகளும் பெற்று செல்வவளத்துடன் வாழச் செய்வார்.

விநாயகருக்கு இடைக்கு கீழே பூத உடம்பும், இடையிலிருந்து கழுத்துவரை தேவவுடம்பும், மிருகத்தலையும் உள்ளது. ஒரு கொம்பு ஆண்மையையும், கொம்பில்லாத பகுதி பெண்மையையும் என்று எல்லாவற்றையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. விநாயகர், யானையை அடக்கும் கருவிகளான பாசமும், அங்குசமும் வைத்திருக்கிறார். தன்னை அடக்குவார் ஒருவரும் இல்லை என்பதைக் குறிக்கும் வகையில் தன் கைகளில் இக்கருவிகளை ஏந்தியுள்ளார்.

விநாயகருக்கு ஐந்து கரங்கள். கும்பம் ஏந்திய திருக்கரம் படைத்தலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் வைத்திருப்பது மறைத்தலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தன்மையையும் விளக்குகிறது. உலகவுயிர்களுக்கு வேண்டிய ஐம்பெரும் தொழில்களையும் விநாயகப்பெருமானே செய்து இப்பெரிய உலகத்தை இயக்குகிறார்.

விநாயகரின் சக்திகளாக சித்தி, புத்தி உள்ளனர். அவர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர். தம்மை வழிபடும் அன்பர்களுக்கு காரிய சித்தியும், அதற்கு புத்தியும் அருள்பவர். அதனால், சித்தி புத்தி என்ற பண்புகளை இரு மனைவிகளாக்கி சித்தி புத்தி விநாயகர் ஆனார். அடியார்களின் இடையூறுகளை அகற்றுவதற்கு வல்லபம் (வல்லமை) வேண்டும். எனவே, இவர் வல்லபை என்னும் சக்தியுடனும் இருப்பார்.
 விநாயகரின் சக்தியாகிய வல்லபை மரீசமுனிவரது புதல்வியாவார். 

வக்ரதுண்ட விநாயகர்: 

இவர் உலகம் ஒவ்வொரு முறை அழியும் போது தோன்றி, மீண்டும் உலகத்தை படைப்பதற்கான வழிமுறைகளை பெருமாள், பிரம்மா, ருத்ரன் (சிவவடிவம்) ஆகியோருக்கு அருளுவார். 

கஜானனபவிநாயகர்: 

சிந்தூரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக அவதரித்தவர். விக்கிரனபராஜர்: காலரூபன் என்ற அரக் கனை கொல்வதற்காக பிறந்தவர். 

மயூரேசர்:

பிரம்மாவிடம் இருந்த வேதங்களை கமலாசுரன் என்ற அசுரன் திருடிச்சென்றபோது மயில் வாகனத்தில் சென்று அவனை வென்று வேதங்களை மீட்டவர். 

உபமயூரேசர்: 

சிந்தாசுரன் என்ற அசுரன் தேவர்களை சிறை வைத்தபோது அவனை அழித்தவர். 

பாலச்சந்திரர்: 

தூமராசன் என்ற அசுரனை கொன்றவர். 

சிந்தாமணி:

கபிலர் என்ற முனிவரிடம் இருந்த சிந்தாமணி என்ற அற்புத பொருளை கனகராஜன் என்பவன் திருடிச் சென்றான். உயிர்காக்கும் இந்த சிந்தாமணியை அவனிடமிருந்து மீட்டவர். 

கணேசர்: 

பலி என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தியபோது, 5 முகத்துடன் தோன்றி அவனை அழித்தவர். 

கணபதி: 

கஜமுகாசுரனை வென்று கணபதியானார். அனைவராலும் கணபதி கணேசர் என்றே அழைக்கப்படுகிறார்.

மகோற்கடர்: 

காசிராஜன் என்ற புகழ்பெற்ற அரசனுக்கு நராந்தகன், தேவாந்தன் என்ற கொடியவர்கள் துன்பம் செய்து வந்தனர். இதனால் உலகத்தில் தர்மம் அழிந்தது. அவர்களை நாசம் செய்ய அவதரித்தவர். 

துண்டி: 

துராசதன் என்ற அசுரனை வென்றவர். 

வல்லபை விநாயகர்: 

மரீச முனிவரின் மகளான வல்லபையை திருமணம் செய்தவர். வல்லபை விநாயகர் ஆனார். 

இதைத் தவிர்த்து விநாயகரை 32 விதமான மூர்த்தங்கள் பெற்று விளங்குகிறார். 
 
1. பால கணபதி 
2. தருண கணபதி 
3. பக்தி கணபதி 
4. வீர கணபதி 
5. சக்தி கணபதி 
6. துவிஜ கணபதி 
7. சித்தி கணபதி 
8. உச்சிட்ட கணபதி 
9. விக்ன கணபதி 
10. க்ஷிப்ர கணபதி 
11. ஏரம்ப கணபதி 
12. லட்சுமி கணபதி 
13. மஹா கணபதி 
14. விஜய கணபதி 
15. நிருத்த கணபதி 
16. ஊர்த்துவ கணபதி 
17. ஏகாட்சர கணபதி 
18. வர கணபதி 
19. திரயாக்ஷர கணபதி 
20. க்ஷிப்ரபிரசாத கணபதி 
21. ஹரித்திரா கணபதி 
22. ஏகதந்த கணபதி 
23. சிருஷ்டி கணபதி 
24. உத்தண்ட கணபதி 
25. ரணமோசன கணபதி 
26. துண்டி கணபதி 
27. துவிமுக கணபதி 
28. மும்முக கணபதி 
29. சிங்க கணபதி 
30. யோக கணபதி 
31. துர்க்கா கணபதி 
32. சங்கடஹர கணபதி 

விநாயகர் என்றால் தனக்கு மேலே ஒரு தலைவர் இல்லாதவர் என்று பொருள். பூத கணங்களிற்கு தலைவராய் அதாவது கணங்களிற்கு அதிபதியாய் இருப்பதனால் கணபதி என அழைக்கப்பட்டார். நமது கஷ்டங்களை, வினைகளை, விக்கினங்களை நீக்குபவர் என்பதனால் விக்னேஸ்வரர் ஆனார். யானை முகத்தினன் என்பதனால் கஜானனன் என்றும், மோதகத்தை விரும்பி உண்பதனால் லம்போதரன், மோதகப்பிரியன் என்றும், ஒரு தந்தத்தை உடையவர் என்பதனால் ஏகதந்தன் என்றும் வழங்கப்படலானார்.

ஐந்து கரத்தினன் எனப்படும் இவர் துதிக்கையுடன் ஐந்து கரத்தினை கொண்டவர். துதிக்கையில் புனித நீர்க்குடம், வலது கைகளில் ஒன்றில் அங்குசமும், மற்றயதில் ஒடிந்த தந்தமும், இடது கைகளில் ஒன்றில் பாசமும், மற்ற கரத்தில் மோதகமும் வைத்திருப்பார். புனித நீர்க் குடத்திலிருக்கும் புனித நீரினைக் கொண்டு உலக வாழ்வில் உழன்று, களைத்து, சோர்வடைந்து தன்னைச் சரணடையும் மக்களின் தாகம் தீர்த்து, களைப்பைப் போக்கி, பிறவா நிலையைக் கொடுத்து தன்னடியில் சேர்த்துக் கொள்கிறார். விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்குவோம் வெற்றிகளை பெறுவோம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow