பணக்காரர்கள் பட்டியல்.. அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம்.. அட! ஷாருக்கானும் இருக்காரா?
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் HCL நிறுவன தலைவர் ஷிவ் நாடார் ரூ.3.14 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளார். பாலிவுட் 'சூப்பர் ஸ்டார்' நடிகர் ஷாருக்கான் முதன்முறையாக இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
டெல்லி: ஹுருன் இந்தியா (Hurun India) ஆராய்ச்சி நிறுவனம் 2024ம் ஆண்டை அடிப்படையாக வைத்து இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அதானி குழும நிறுவனத்தின் தலைவர் கவுதம் அதானி ரூ.11,61,800 கோடி மதிப்புடன் முதல் இடம் பிடித்துள்ளார். ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி, ரூ.10,14,700 கோடி சொத்து மதிப்புடன் 2வது இடத்தில் உள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு முகேஷ் அம்பானி இந்த பட்டியலில் 4வது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். கடந்த ஓராண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 95% வளர்ச்சி அடைந்துள்ளது. அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு அதிரடியாக குற்றம்சாட்டியது.
''அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தைகளில் முறைகேடு செய்து பங்குகளின் மதிப்பை உயர்த்தி காட்டி அதிக கடன்கள் பெற்று வருகிறது.மேலும் போலி நிறுவனங்களை தொடங்கி வரி ஏய்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றன'' என்று ஹிண்டன்பர்க் அறிக்கையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தது. ஹிண்டன்பர்க்கின் அறிக்கையால் அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அதானி குழும நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனாலும் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்வை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் HCL நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் ரூ.3.14 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளார். இவர் கடந்த ஆண்டு 4வது இடத்தில் இருந்த நிலையில், 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவல்லா ஒரு இடம் சரிந்து ரூ.2.89 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 4வது இடம் பிடித்துள்ளார்.
தொடர்ந்து சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் திலீப் ஷங்வி ரூ.2.50 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 5வது இடத்திலும், பிர்லா குழுமத்தின் குமார் மங்கலம் பிர்லா & குடும்பத்தினர் ரூ.2,35,200 கோடி சொத்து மதிப்புடன் 6வது இடத்திலும், இந்துஜா குழுமத்தின் கோபிசந்த் ஹிந்துஜா 1,92,700 கோடி சொத்து மதிப்புடன் 7வது இடத்திலும் உள்ளனர்.
ரூ.1,000 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்கள் ஹுருன் இந்தியா பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 1,539 பேர் இடம்பிடித்துள்ள நிலையில், கடந்த ஆண்டை விட 220 பேர் புதிதாக இந்த பட்டியலில் இணைந்துள்ளனர். பாலிவுட் 'சூப்பர் ஸ்டார்' நடிகர் ஷாருக்கான் முதன்முறையாக இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.7,300 கோடி இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
What's Your Reaction?