ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.. நீதிபதிகள் சொன்னது என்ன?

எப்ஐஏ சான்று இல்லாமல் கார் பந்தயம் நடத்தப்பட மாட்டாது என அரசு தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சான்று இல்லாமல் பந்தயம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் என தெரிவித்தனர்.

Aug 29, 2024 - 22:54
Aug 30, 2024 - 01:37
 0
ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.. நீதிபதிகள் சொன்னது என்ன?
Chennai High Court

சென்னை: நாளை மறுநாள் (ஆகஸ்ட் 31) மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை விதிக்கக் கோரி, தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கார் பந்தயம் நடத்தும் போது மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், எப்ஐஏ எனும் சர்வதேச அமைப்பு ஒப்புதல் பெறப்பட்டதா? மருத்துவமனைகளுக்கு இடையூறு இல்லாமல் மக்கள் செல்ல எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுமக்கள் பாதுகாப்பு, இயல்பான போக்குவரத்து ஏற்பாடு, மருத்துவமனைகளுக்கு இடையூறு இல்லாமல் செல்வது உள்ளிட்டவற்றுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, எப்ஐஏ சான்று குறித்து மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பினார். அதற்கு, சான்று இல்லாமல் பந்தயம் நடத்தப்பட மாட்டாது என அரசு தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சான்று இல்லாமல் பந்தயம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் என குறிப்பிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட தலைமை வழக்கறிஞர், பந்தயம் நடக்கும் தினத்தன்று காலையில் தான் எப்ஐஏ ஆய்வு செய்யும் என விளக்கமளித்தார். இதையடுத்து, எப்ஐஏ சான்று நகலை மனுதாரர் தரப்புக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கில் இன்று மாலை 4.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்தனர்.

அதன்படி 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள் எஃப்.ஐ.ஏ சான்றிதழ் இல்லாமல் கார் பந்தயம் நடத்தக்கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர். இதேபோல் பொதுமக்கள், மருத்துவமனைகளுக்கு எந்த இடையூறோ, பாதிப்போ ஏற்படாத வகையில் கார் பந்தயத்தை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow