SC ST Commission Files Case on NTK Seeman : நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடியூர் சாட்டை துரைமுருகன் கடந்த மாதம் 11ம் தேதி தென்காசியில் கைது செய்யப்பட்டார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பாடல் பாடியதாக வந்த புகாரின் பேரில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் குற்றாலத்தில் குளிக்கச் சென்ற சாட்டை துரைமுருகனை கைது செய்தனர்.
பின்பு சாட்டை துரைமுருகனை காவலில் வைக்க போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து துரைமுருகன் கைதுக்கு கண்டனம் தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ''யாரோ எழுதிய, யாரோ வெளியிட்ட பாடலைதான் சாட்டை துரைமுருகன் பாடியுள்ளார். அவராகவே இந்த பாடலை உருவாக்கவில்லை. பிறகு அவர் ஏன் அவரை கைது செய்தீர்கள்'' என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து கலைஞர் கருணாநிதி குறித்த சர்ச்சை பாடலை செய்தியாளர்கள் முன்பு பாடிய சீமான், 'முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்' என்றும் போலீசுக்கு சவால் விடுத்திருந்தார். இதன்பிறகு பாடலில் குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வசைச் சொல்லாக பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை சீமான் அவமானப்படுத்தி விட்டார் என்று திமுகவினர், கூட்டணி கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். மேலும் கலைஞர் கருணாநிதியை அவதூறு செய்து விட்டார் எனக்கூறி சீமான் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டன.
அதன்பிறகு அந்த குறிப்பிட்ட வார்த்தை குறித்து விளக்கம் அளித்த சீமான், அந்த வார்த்தை கிராமப்புறங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியும் அந்த வார்த்தையை பயன்படுத்தி அறிக்கைகள் வெளியிட்டுள்ளார். மேலும் கந்த சஷ்டி கவசத்திலும் அந்த வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
கருணாநிதியை அவதூறு வார்த்தைகளால் குறிப்பிட்ட சீமானுக்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். சீமான் நாகரீகமாக பேச வேண்டும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்தார். திராவிட கழக தலைவர்கள் சிலர் சீமானை ஒருமையாக தாக்கி பேசியிருந்தனர்.
இதற்கிடையே கருணாநிதி குறித்து பாடல் பாடி இழிவாக சீமான் பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் பட்டாபிராமைச் சேர்ந்த அஜேஷ் என்பவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். ஆனால் ஆவடி போலீஸ், புகார் தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இது தொடர்பாக அஜேஷ், எஸ்சி, எஸ்டி ஆணையத்தில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில், அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க பட்டாபிராம் காவல் ஆய்வாளருக்கு எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதாவது சீமான் மீது வன்கொடுமை சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து அதன் அறிக்கையை வருகிற 2ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று எஸ்சிஎஸ்டி ஆணையம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.