அமலுக்கு வந்த முதல் நாளிலேயே அடாவடி.. வசூலில் இறங்கிய டாஸ்மாக் ஊழியர்

பில்லிங் சிஸ்டம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே அரசு மதுபான கடைகளில் கூடுதலாக மதுபான பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலித்து வருவது மது பிரியர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Nov 16, 2024 - 07:35
Nov 16, 2024 - 07:39
 0
அமலுக்கு வந்த முதல் நாளிலேயே அடாவடி.. வசூலில் இறங்கிய டாஸ்மாக் ஊழியர்
கூடுதலாக மதுபான பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலித்த டாஸ்மாக் ஊழியர்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் டிஜிட்டல் முறை விற்பனையை கொண்டு வரும் வகையில் ஆரம்ப கட்டமாக வடசென்னை, கோவை வடக்கு ஆகிய பகுதிகளில் உள்ள 266 டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறை விற்பனை நாளை முதல் தொடங்க உள்ளது.

இந்த டிஜிட்டல் முறை விற்பனையில் மது பிரியர்கள் மது வாங்கும் போது அதற்குரிய ரசீது டாஸ்மாக் பணியாளர்கள் மூலமாக வழங்கப்படும். மேலும், Gpay முறையிலும் மது வாங்கிக் கொள்ளலாம் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நடைமுறையை அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைபடுத்துவதற்கு முன்பாக முதற்கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 கடைகளிலும், ராமநாதபுரம் பகுதியிலுள்ள 7 கடையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தற்போது காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் திட்டத்தை செயல்படுத்த நிர்வாகம் திட்டமிடப்பட்டு இதற்காக கடந்த சனிக்கிழமை முதல் டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. 

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள 131 கடைகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 89 கடைகளிலும் என மொத்தம் 220 கடைகளில் இன்று முதல் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது. இதனால் போலி மதுபானம் மற்றும் மது வாங்கும் வாடிக்கையாளரிடம் இருந்து பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் பெறப்பட்டு வந்தது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த க்யூ ஆர் கோடு சிஸ்டம் நடைமுறைக்கு வந்த இன்றைய தினமே வழக்கமாக பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிப்பது போன்றே இன்றைய தினமும் தொடர்ந்து காஞ்சிபுரத்தின் பல்வேறு அரசு மதுபான கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பகுதியில் உள்ள கடை எண் - 4366 கடையில் மது பிரியர்களிடம் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வசூலிப்பதுடன் இன்றைய தினம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட பில்லும் கொடுக்கப்படாமல் விற்பனையானது நடைபெற்று வருகிறது.

இது குறித்து அந்த மதுபான கடையில் மதுபானங்களை வாங்கிய மது பிரியர்கள் மதுபான வகைகளுக்கு 10 ரூபாயும்,‌ பீர் வகை மதுபானத்திற்கு 20 ரூபாயும் வசதிப்பது குறித்து வாடிக்கையாளர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் அவரிடம் அக்கடையில் ஊழியர், குளிர்ச்சி ஊட்டப்படுவதற்காகவும், மதுபான வகைகளை ஏற்றி இருக்கும் கூலிகள் உள்ளிட்டவைகளும் இதில் அடங்கும் எனவும் பேசிய அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காஞ்சிபுரத்தில் பல்வேறு அரசு மதுபான கடையை இத்தகைய நிலையே உள்ள நிலையில் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் உடினடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கூடுதல் வசூலை தடுத்து நிறுத்தவும் மது பெயர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow