இந்த அம்மன் கோயிலில் ஆண்களுக்கு மட்டும்தான் அனுமதி... வினோத வழிபாடு!
கமுதியில் உள்ள எல்லை பிடாரியம்மன் கோயிலில் ஆண்கள் மட்டுமே பூஜை நடத்தி வழிபடும் வினோத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது முதல் நாடு கிராமம். இக்கிராம கண்மாய் கரையில் அமைந்துள்ளது எல்லைப்பிடாரி அம்மன் பீடம். வருடத்திற்கு ஒருமுறை புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத திருவிழா இங்கு நடைபெறுகிறது. முன்னொரு காலத்தில் 5 ஆண்களோடு பிறந்த பெண் கெட்டுப் போனதாக அண்ணன் மனைவிகளால் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு உடலை பொது மக்கள் பார்க்கும் போது அப்பெண் உடல் மாயமாகி எல்லை பிடாரி அம்மன் ஆக மாறியதாக ஒரு கதை உண்டு.
பெண்களால் துன்புறுத்திக் கொலை செய்யப்பட்டதால் பெண்களை வெறுக்கும் எல்லைப்பிடாரியம்மன் முதல்நாடு கிராம மக்களின் கனவில் வந்து தங்கள் ஊர் எல்லையில் இருந்து காவல் தெய்வமாக இருந்து காப்பாற்றுவேன் என்று,ம் என்னை ஆண்கள் மட்டும் வருடம் ஒரு முறை கைகுத்தல் பச்சரிசி சாதம், செம்மறி ஆடுகளை வெட்டி பலி கொடுத்து வழிபடவேண்டும், அப்படி செய்தால் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும், வேண்டுவது கிடைக்கும் என்று கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் எப்போதுமே சாமி கும்பிடும் நேரத்தில் அப்பகுதிக்கு பெண்கள் வரக்கூடாது என கூறியதால் வருடம் ஒரு முறை இந்த ஆண்கள் திருவிழா முதல்நாடு கிராமத்தினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த திருவிழா நடக்கும் தேதி அறிவித்ததில் இருந்து ஒரு வார காலம் இப்பகுதிக்கு பெண்கள் யாரும் வரு மாட்டார்களாம். இந்த திருவிழாவுக்காக முதல்நாடு கிராமத்தில் ஊர்கூடி ஊர் வரி வசூலித்து நேற்று (5.10.23) இரவு 11 மணி அளவில் ஆண்கள் மட்டும் ஒன்று கூடி கால் படாதவாறு மண் எடுத்து பீடம் அமைத்தனர். இதையடுத்து இன்று (அக். 6) காலை அம்மனுக்கு பூ மாலை அணிவித்து பொங்கல் வைத்து, 28 செம்மறி கிடாய்கள் பலியிட்டு, கைக்குத்தல் அரிசி சாதம் செய்து, பின்பு அந்த சாதத்தை உருண்டைகளாக உருட்டி படைத்துள்ளனர். பூஜை முடிந்த பின்பு சாத உருண்டை மற்றும் கறி ஆண்கள் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
மேலும் படிக்க: கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி.... போலீசையே மிரள வைத்த சம்பவம்!
இங்குள்ள எந்த பொருளையும் பெண்கள் பார்க்க கூடாது என்பதால் மீதமிருந்த சாப்பாடு, விபூதி, பூஜை பொருட்கள் அனைத்தும் அங்கேயே புதைக்கப்பட்டது. ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழாவிற்கு கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மலர் மாலையுடன் வந்து எல்லை பிடாரி அம்மனை வழிபட்டனர். கறி விருந்து என்றால் மது குடித்து கறி சாப்பிடுவது வழக்கம். ஆனால் இங்கு மது அருந்தி வந்தால் எல்லை பிடாரியம்மன் தண்டனை கொடுக்கும் என்பதால் யாரும் மது அருந்துவது இல்லை, அதனால் போலீஸ் பாதுகாப்பும் தேவை இல்லை என்கின்றனர் அப்பகுதி ஆண்கள்.
What's Your Reaction?