தமிழ்நாடு

வலுக்கட்டாய பாலின மாற்று அறுவை சிகிச்சை... சிக்கலில் முன்னாள் எம்.எல்.ஏவின் மருத்துவமனை!

நான்கு சிறார்களுக்கு திருநங்கையாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்ததாக திருநங்கை அலினா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உறவினர்கள் புகாரளித்துள்ளனர்.

வலுக்கட்டாய பாலின மாற்று அறுவை சிகிச்சை... சிக்கலில் முன்னாள் எம்.எல்.ஏவின் மருத்துவமனை!
வலுக்கட்டாய பாலின மாற்று அறுவை சிகிச்சை

சென்னை புரசைவாக்கம் பொன்னியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி வேளாங்கண்ணி. இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்து பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தன்னுடைய மகன் மற்றும் மருமகள் கூலி வேலை செய்து வருவதாகவும், தற்போது 17 வயதாகி வரும் தனது 17 பேரன் தனது வீட்டில் தங்கி படித்து வந்ததாகவும் கூறினார். இந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சமூக வலைதளங்கள் மூலமாக திருநங்கை அலினா என்பவர் தனது பேரனோடு பழக்கம் ஏற்படடுத்தி கொண்டதாகவும், சிறுவன் படித்த தனியார் பள்ளிக்கு அடிக்கடி சென்று தன்னுடைய வீட்டிற்கு அலினா வற்புறுத்தி அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களோடு வந்தால் படிக்கத் தேவையில்லை, வேலைக்கு போக தேவையில்லை, ஆசைப்பட்டது போல் வாழலாம் என தனது பேரனை ஆசை வார்த்தை கூறி அவர்களோடு தங்க வைத்ததாகவும் பின் சிறுவனை பெண்ணாக மாற்றுவதற்கு மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு (அதிமுக முன்னாள் எம்எல்ஏ சரவணனுக்கு சொந்தமான தனியார் சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி) அழைத்துச் சென்று பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததாகவும் தெரிவித்தார். அறுவை சிகிச்சைக்கு ஒத்துக் கொள்ளாத தனது பேரனை கொலை மிரட்டல் விடுத்து கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர்கள் திருநங்கை அலினாவிடம் சென்று கேட்டபோது, அலினா அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பின்னர் சிறுவனை தன்னுடன் அழைத்துச் சென்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் பிச்சை எடுக்க வைத்ததாகவும் பிக்பாக்கெட் அடிக்க கற்றுக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுவன் தப்பித்து தங்களோடு வந்துவிட்டதாகவும் தங்களது பேரனை போல நான்கு சிறுவர்களை அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாற்றி பிச்சை எடுக்க வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். திருநங்கை அலீனா மற்றும் அவரோடு இருக்கும் மற்ற நபர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.