அம்மனுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் கூழ் வார்த்தல், பால்குடம் ஏந்துதல், தீமிதித்தல் என்று அனைத்து அம்மன் கோயில்களும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.
பூமாதேவி அம்மனாக அவதரித்தது இந்த ஆடி மாதத்தில்தான். எனவேதான் இம்மாதம் அத்தனை சிறப்புகளை பெற்றிருக்கிறது. திருமணமாகாத பெண்கள் ஆடி செவ்வாய், வெள்ளிகளில் விரதமிருந்து அம்மனை வழிப்பட்டால் நல்ல மனவாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. மேலும் வீடுகளில் கூழ்வார்த்து அம்பிகையை வழிபட்டால் ஆண்டு முழுவதும் அம்மனை வணங்கியதன் பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆடி மாதத்தில் காற்றும் மழையும் அதிகளவில் இருக்கும். காற்றை காளியும் மழையை மாரியம்மனும் கட்டுப்படுத்துவதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இந்த மாதங்களில் கூழ் வார்த்து வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில், தென்காசி மாவட்டம், வீராணம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தான்தோன்றி அம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கோயில் திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஆடி மாத திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) அன்று கால்நட்டு விழாவுடன் தொடங்கிய நிலையில், நாள்தோறும் ஸ்ரீ தான்தோன்றி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிலையில் கடந்த 2 தினகளுக்கு முன்பு ஊரை சுற்றி உள்ள ஏராளமான பெண்கள் ஒன்றிணைந்து 501 விளக்குகளை வைத்து தீபம் ஏற்றி சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். ஏராளமான பெண்கள் ஒன்றிணைந்து மாங்கல்ய பாக்கியம் செழிக்க வேண்டியும், உலக நன்மை வேண்டியும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்திய நிலையில், மஞ்சள் கயிறுகளை கட்டி மாங்கல்யம் பாக்கியம் செழிக்க வேண்டி சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.
மேலும் படிக்க: ஆடிப்பூரம் தேரோட்டம் கோலாகலம்.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பிறந்தநாளுக்கு ஸ்ரீரங்கநாதர், கள்ளழகர் பரிசு
இதைத்தொடர்ந்து, தங்களது வேண்டுதல்கள் நிறைவேற சிறுமிகள் மற்றும் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் விரதமிருந்து முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். இந்த நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் மட்டுமல்லாது அந்த பகுதியை சுற்றி உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.