ஆடிப்பூரம் தேரோட்டம் கோலாகலம்.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பிறந்தநாளுக்கு ஸ்ரீரங்கநாதர், கள்ளழகர் பரிசு

aadipooram 2024: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவாடிப்பூர தேரோட்டத்திற்கு ஸ்ரீரங்கம் மற்றும் அழகர் கோவிலில் இருந்து பரிவட்டங்கள் மற்றும் மங்களப் பொருட்கள் அடங்கிய சீர்வரிசைகள் கொண்டுவரப்பட்டன.

Aug 7, 2024 - 07:26
 0
ஆடிப்பூரம் தேரோட்டம் கோலாகலம்.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பிறந்தநாளுக்கு ஸ்ரீரங்கநாதர், கள்ளழகர் பரிசு


விருதுநகர்: ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்த ஆண்டாளின் பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  அழகாய் இன்று ரங்கமன்னாருடன் தேரில் வரப்போகும் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கநாதரும், அழகர் கோவில் கள்ளழகரும் பட்டு வஸ்திரங்களையும் மங்கள பொருட்களையும் பரிசாக அனுப்பி வைத்துள்ளனர். 

ஸ்ரீவில்லிபுத்தூர்:

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்ற பெருமைக்குரியது ஸ்ரீவில்லிபுத்தூர். இங்குள்ள வடபத்ரசாயி கோவில்  பெருமாளின் மங்களாசாசனம் பெறற் 108 திவ்ய தேசங்களில் 90வது திவ்யதேசமாகும். இந்த ஆலயத்தில் ஆடி மாதம் பூர நட்சத்திரம் அன்று ஆடிப்பூர தேரோட்டமும், பங்குனி உற்சவத்தில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரெங்க மன்னார் திருக்கல்யாணம் பிரசித்தி பெற்றதாகும். மார்கழி மாதத்தில் திருப்பாவை திருவிழாவும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வும் சிறப்பாக நடைபெறும். 

ஆடிப்பூரம்: 

இந்த வருடத்திற்கான ஆடிப்பூர திருவிழா கடந்த மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இன்றுடன் 8 நாட்கள் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.முக்கிய நிகழ்வான ஒன்பதாம் நாளான இன்று புதன்கிழமை  ஆடிப்பூர திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. 

சூடிக்கொடுத்த சுடர்கொடி:

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால் அவருக்கு பூ மாலையுடன் பாமாலை சூட்டியதோடு அவரிடமே மணமாலையும் சூடிக்கொண்டாள். இதனால் ஆண்டாளுக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்ற சிறப்பு பெயரும் ஏற்பட்டது. ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்குமிடையே சம்பந்த உறவும் மங்கள பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலம் இருந்து வந்தது.

ஸ்ரீரங்கநாதர் ஆண்டாள்:

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் சித்திரை தேரோட்டநாளில் ஆண்டுதோறும் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து மங்கல பொருட்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படும் அதேபோல ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் பிறந்த நாளான ஆடிப்பூரத் தினத்தன்று நடைபெறும் தேரோட்டத்தின்போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திர மரியாதை ஆண்டாளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கள்ளழகருக்கு ஆண்டாள் மாலை:

இதே போல சித்திரை திருவிழாவில் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையும் மங்கள பொருட்களும் பரிசாக அனுப்பி வைக்கப்படும். ஆண்டாள் மாலையை அணிந்து கொண்டுதான் கள்ளழகர் தங்கக் குதிரை மீதேறி வந்து வைகையில் கால் வைப்பார். தனக்கு மாலை கொடுத்த ஆண்டாளுக்கு ஆடிப்பூரம் நாளில் பிறந்தநாள் பரிசாக பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பார் கள்ளழகர். 

ஆடிப்பூரத்திற்கு பட்டு வஸ்திரம் பரிசு

இந்த ஆண்டும் ஸ்ரீரங்கம் மற்றும் அழகர் கோவிலில் இருந்து பரிவட்டங்கள் மற்றும் மாலை சீர்வரிசை பொருட்கள் கொண்டு வரப்பட்டன. ஒன்பதாம் திருநாளான இன்று காலை ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பரிவட்டம் உள்ளிட்டவைகள் மூலவருக்கும் மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பரிவட்டம் மாலை ஆகியவைகள் உற்சவருக்கும் சாற்றப்படும். 

ஆடிப்பூரம் தேரோட்டம்

தொடர்ந்து திருத்தேரில்  எழுந்தருளும் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் கள்ளழகர் கோவில் இருந்து கொண்டுவரப்பட்ட பரிவட்டங்களை சாற்றியவாறு இன்று அதிகாலை எழுந்தருளினார். இதனை அடுத்து இன்று காலை சுமார் 9.05 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வர இருக்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. 

ஆடிப்பூரம் நாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேரோட்டத்தை தரிசித்தால் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் திருமணமாகாதவர்களுக்கு கல்யாண வரம் கைகூடி வரும் என்பது நம்பிக்கை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow