Premalatha Vijayakanth : எங்க வீட்டு பிள்ளை விஜய்.. புத்திசாலி.. எல்லாத்தையும் சமாளிப்பார் - பிரேமலதா பாராட்டு

Premalatha Vijayakanth About TVK Leader Vijay : நடிகர் விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். நடிகர் விஜய் சர்ச்சைகளை சமாளித்து தான் வெற்றி பெற முடியும்; விஜய் ஒரு புத்திசாலி அனைத்தையும் சமாளிப்பார் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Aug 24, 2024 - 16:05
Aug 24, 2024 - 16:14
 0
Premalatha Vijayakanth : எங்க வீட்டு பிள்ளை விஜய்.. புத்திசாலி.. எல்லாத்தையும் சமாளிப்பார் - பிரேமலதா பாராட்டு
Premalatha Vijayakanth About TVK Leader Vijay

Premalatha Vijayakanth About TVK Leader Vijay : விஜய் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் யோசித்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். விஜய் எங்களுக்கு புதிது கிடையாது. எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் சாலிகிராமத்தில் தான் பல ஆண்டுகளாக இருந்தார். கேப்டனுக்கும், எஸ்.ஏ.சி. க்கும் இடையேயான நட்பு புதிது இல்லை. விஜய் எப்பொழுதும் எங்கள் வீட்டிற்கு வருவது போன்று எங்கள் வீட்டுப்பிள்ளை போன்று தான் வந்துள்ளார் என்றும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் 71 ஆண்டுகள் நிறைவானதை கொண்டாடும் வகையில் 71 டாட்டு கலைஞர்களால் 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்தின் முகம் வலது கையில் டாட்டுவாக போடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த சாதனை கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது.

டாட்டு போடும் நிகழ்வை கட்சியின்  பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், 
கேப்டனின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு டாட்டூ போடும் நிகழ்வு நடைபெறுகிறது. கேப்டன் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாளை தேமுதிக அலுவலகத்தில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது. 

எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது. அதேபோல் எம்ஜிஆர் பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு கேப்டன் நினைவிடத்தில் வைத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்க இருக்கிறோம். அந்தியூரில் செருப்பு கூட போடாமல் மலைவாழ் மக்களுக்கு நடந்து சென்று உதவி செய்த வரும் அப்புசாமி என்பவருக்கு இரு சக்கர வாகனம் வழங்கப்பட இருக்கிறது. மேலும்,  தமிழ் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. நாளை காலை 8 மணி இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்பட உள்ளது. மேலும், பல முக்கியம் விசியங்களும் நாளை அறிவிக்கப்பட உள்ளது. 

கேப்டன் இல்லாத முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறது. அவர் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மன வலியோடு தான் இதை கொண்டாடுகிறோம்

விஜய் கட்சி கொடி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா, அந்த கட்சிக்கொடி அறிமுகத்திற்கு முன்பாக வீட்டிற்கு வந்து கேப்டனினுக்கு விஜய் மரியாதை செலுத்தினார். கேப்டனின் ஆசிர்வாதத்தை வாங்கி சென்றார். விஜய்க்கு தேமுதிக சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்

கொடியில் இருக்கும் சின்னம் சர்ச்சையானது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா, அரசியல் என்றாலே சர்ச்சைகள்தான். அந்த சர்ச்சைகளை சவால்களை முறியடித்து தான் வெற்றி பெற முடியும். இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறது இதுபோன்று பல சர்ச்சைகளை சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. அதுதான் அரசியல்.. விஜய் புத்திசாலி அமைதியான பையன்.. நிச்சயமாக இதையெல்லாம் சமாளிப்பார் என்று நம்புகிறேன்

விஜய்க்கு சொல்லும் அறிவுரை தொடர்பான கேள்விக்கு பதில்  திரை உலகில் நிறைய சவால்களை சந்தித்து வெற்றி பெற்று இருக்கிறார்.  அரசியலை சினிமா போன்று எடுத்துக் கொள்ள முடியாது. அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் யோசித்து எடுத்து வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய அறிவுரை

விஜய் உடனான சந்திப்பு 2026 கூட்டணிக்காக முன்னெடுப்பா என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா, இது நட்புணர்வோடு நடைபெற்ற ஒரு சந்திப்பு. விஜய் எங்களுக்கு புதிது கிடையாது. எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் சாலிகிராமத்தில் தான் பல ஆண்டுகளாக இருந்தார். கேப்டனுக்கும், எஸ்.ஏ.சி. க்கும் இடையேயான நட்பு புதிது இல்லை. விஜய் எப்பொழுதும் எங்கள் வீட்டிற்கு வருவது போன்று எங்கள் வீட்டுப்பிள்ளை போன்று தான் வந்துள்ளார். 

விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் உடன் விஜய் ஜாலியாக பேசினார். சினிமா உலகில் நீங்கள்தான் எங்களுக்கு முன் உதாரணம் என சண்முக பாண்டியன் கூறினார். அப்பொழுது அரசியலில் எனக்கு விஜய பிரபாகரன் தான் சீனியர் என்றும் பத்திரிகையை நன்றாக சமாளிக்கிறீர்கள் என்றும் கூறினார். ஒரு குடும்ப சந்திப்பு போன்று தான் அது அமைந்தது

கோட் திரைப்படத்தில் ஏ ஐ தொழில்நுட்பத்தில் கேப்டன் வருகிறார் என்பதை வெங்கட் பிரபு ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறார். அந்த வகையில் அவர்கள் நேரில் வந்து கேப்டனை திரைப்படத்தில் பயன்படுத்த அனுமதித்ததற்கு நன்றி தெரிவித்து சென்றனர்

திரைப்படம் வெளியானதும் நீங்கள் குடும்பத்தினரோடு வந்து படம் பார்க்க வேண்டும் என்றும் உங்களுக்கென சிறப்புக் காட்சியை வைத்துள்ளேன் என்றும் விஜய் கூறினார். கண்டிப்பாக வந்து பார்ப்போம் என கூறினேன். கேப்டன் வரும் காட்சி மிகப் பிரம்மாண்டமாக வந்துள்ளதாக விஜய் மகிழ்ச்சியாக கூறினார். அவருக்கு என் வாழ்த்துகள்.

பழனி மாநாடு தொடர்பான கேள்விக்கு கடவுள் இல்லை இல்லை என்று சொல்கிறார்கள். மக்களோடும் தெய்வத்தோடும் தான் கூட்டணி என சொல்லி அரசியலுக்கு வந்தவர் கேப்டன் அவர் போன்று உறுதியாக இருக்க வேண்டும். உங்கள் நேரத்துக்கு தகுந்தார் போல் மாற்றி பேசுவதை மக்கள் நிச்சயமாக ஏற்க மாட்டார்கள். 

முதல்வர் வெளிநாடு பயணம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா, வெளிநாட்டிற்கு சென்று உண்மையிலேயே முதலீடு ஈர்த்து அதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைத்தால் தேமுதிக தான் முதலில் வாழ்த்து சொல்லும் ஏற்கனவே பல நாடுகளுக்கு சென்றுள்ளார் ஆனால் எத்தனை நிறுவனங்கள் இங்கு வந்துள்ளது என்ற கேள்வி எழுகிறது. முதலீடுகளை ஈர்க்க முதல்வருக்கு வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்கிறேன். 

டாட்டூ போடும் நிகழ்வு திடீரென்று இன்று தயார் செய்தது கிடையாது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே பலர் விருப்பம் தெரிவித்து இருந்தனர். அனைத்து வகையான பாதுகாப்போடும் தான் டாட்டூ போடப்பட்டு வருகிறது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow