TN New Smart Ration Card : புதிய ரேஷன் கார்டுகளுக்கு அப்ளை பண்ணியிருக்கீங்களா?.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN New Smart Ration Card : ''2024 மார்ச் மாதத்தில் 45,509 குடும்ப அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. இடையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைமுறைகளின் காரணமாக விண்ணப்பங்களைச் சரிபார்த்தல் மற்றும் ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ள இயலாத சூழ்நிலை நிலவியதால் தேர்தல் முடிந்தபின் கள விசாரணை மற்றும் விண்ணப்ப விவரங்கள் சரிபார்க்கும் பணி முடுக்கிவிடப்பட்டன'' என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
TN New Smart Ration Card : தமிழ்நாட்டில் 3 லட்சம் பேருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாயின. ''ஸ்மார்ட் குடும்ப அட்டைகளைப் பெறுவது தமிழ்நாட்டு மக்களின் உரிமை ஆகும். எந்தக் காரணத்தைக் கூறியும் அதை தமிழக அரசு தட்டிக்கழிக்க முடியாது. எனவே, புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதேபோல் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை விரைந்து வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், புதிய ரேஷன் கார்டுகளை வழங்குவதில் எந்த தாமதமும் இல்லை என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்ற பின்பு இதுவரை 15,94,321 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்துக்கான பயனாளிகள் குடும்ப அட்டையை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுக்கப்பட்டதால், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை மாறுபடாமல் பராமரிக்கப்பட்டதையொட்டி 06.07.2023 முதல் புதிய குடும்ப அட்டைகள் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கும் பணியும் ஏற்கெனவே அச்சடிக்கும் நிலையிலிருந்த குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
ஆனாலும் மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 17,197 குடும்ப அட்டைகள் டிசம்பர் 2023 மாதத்தில் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. அதேபோன்று வெள்ளம் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 10,380 குடும்ப அட்டைகள் டிசம்பர் 2023 மாதத்தில் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன.
2024 மார்ச் மாதத்தில் 45,509 குடும்ப அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. இடையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைமுறைகளின் காரணமாக விண்ணப்பங்களைச் சரிபார்த்தல் மற்றும் ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ள இயலாத சூழ்நிலை நிலவியதால் தேர்தல் முடிந்தபின் கள விசாரணை மற்றும் விண்ணப்ப விவரங்கள் சரிபார்க்கும் பணி முடுக்கிவிடப்பட்டன. பெறப்பட்ட 2,89,591 விண்ணப்பங்களில் 1,63,458 புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, 92,650 விண்ணப்பங்கள் ஒப்புதலளிக்கப்பட்டுள்ளன.
ஒப்புதல் அளிக்கப்பட்ட 24,657 விண்ணப்பங்களுக்குப் புதிய குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. ஒப்புதல் அளிக்கப்பட்ட இதர விண்ணப்பங்களுக்கும் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு வருகின்றன. மீதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கும் தொடர்ந்து கள விசாரணையும் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணியும் விரைந்து நடந்து வருகின்றன. ஆதலால் சிலர் கூறுவதுபோல் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதில் எந்த தாமதமும் இல்லை என்பதையும் விண்ணப்பித்த அனைவருக்கும் குடும்ப அட்டைகள் விரைந்து வழங்கப்படும்'' என்று அவர் கூறியுள்ளார்.
What's Your Reaction?