‘பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது’ - இந்திய கிரிக்கெட் வாரியம் பிடிவாதம்
ஆசியக் கோப்பை போட்டிகளை பாகிஸ்தான் நடத்திய நிலையில், அந்நாட்டுக்கு செல்ல இந்தியா மறுத்ததால், இந்திய அணி விளையாடிய போட்டிகள் மட்டும் இலங்கையில் நடத்தப்பட்டது.
சாம்பியன் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என்று இந்திய அணி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஆட்டமாக உள்ளது. எப்படி இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் உலக பிரசித்தி பெற்றதோ, அதேபோல இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி உலகக் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.
கடந்த 2012ஆம் ஆண்டிற்கு பிறகு இரு நாடுகளும் இணைந்து இருதரப்பு போட்டிகளில் விளையாடுவது கிடையாது. இந்தியாவும் பாகிஸ்தானும் 2012-க்கு பிறகு இருதரப்பு போட்டிகளில் விளையாடவில்லை. அதேபோல், 2007ஆம் ஆண்டிற்கு பிறகு, டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதும் இல்லை. முக்கியமான ஐசிசி தொடர்களை தவிர, மற்ற எந்த தொடர்களிலும் இரண்டு அணிகளும் மோதிக்கொள்வதை தவிர்த்து வந்தன.
ஆனால், “இரு அணிகளும் மோதும் போட்டியில் விளையாட விரும்புகிறேன். அவ்வாறு நடந்தால், இரு தரப்புக்கும் இடையே மிகப்பெரிய போட்டியாக இருக்கும் என நினைக்கிறேன். பேட்டிற்கும், பந்துக்கும் இடையே ஒரு போர் நடக்கும். ஏன் இது நடக்கக்கூடாது” என்று டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார்.
அதேபோல சில தினங்களுக்கு முன்பு கூட, இரு அணிகளுக்கு இடையேயான இரு தரப்பு தொடரை ஆஸ்திரேலியாவில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ஹாக்லி விருப்பம் தெரிவித்து இருந்தார். ‘இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடருக்கு உதவுவதில் பங்களிப்பு செலுத்த முடிந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்’ என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் 8 ஆண்டுகளுக்கு பின்னர் அடுத்த ஆண்டில் பாகிஸ்தானில் நடத்தப்பட உள்ளது. ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் இதில் பங்கேற்கின்றன. பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை தொடர் நடத்தப்பட உள்ளது. இந்திய அணியின் போட்டிகள் அனைத்தும் பாதுகாப்பு காரணங்களுக்காக லாகூரிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி மார்ச் 1ஆம் தேதி நடத்தப்பட திட்டமிடப்பட்டது.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 15 போட்டி நடத்தப்படுகிறது. லாகூர் மைதானத்தில் 7, கராச்சியில் 3, ராவல்பிண்டியில் 5 போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்தாண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டிகளை பாகிஸ்தான் நடத்திய நிலையில், அந்நாட்டுக்கு செல்ல இந்தியா மறுத்ததால், இந்திய அணி விளையாடிய போட்டிகள் மட்டும் இலங்கையில் நடத்தப்பட்டது. அதேபோல், இந்தியா பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் துபாய் அல்லது இலங்கை ஆகிய நாடுகளில் நடத்த வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தி வந்தது.
ஆனால், பிசிசிஐ இவ்வாறு கோரிக்கை வைத்தால், இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் [2023] பங்கேற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்தது. பின்னர், இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் சமரசம் செய்துகொண்டதை அடுத்து, நடந்துமுடிந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது.
இந்நிலையில், ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணியில் போட்டிகளை இலங்கையில் நடத்தியது போலவே, சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் நடத்த வேண்டும் என்று பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இம்மாத இறுதியில், கொழும்புவில் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
What's Your Reaction?