ஆடிக்கிருத்திகை.. திருத்தணியில் காவடியுடன் குவிந்த பக்தர்கள்.. எங்கும் எதிரொலிக்கும் அரோகரா முழக்கம்!

Tiruttani Aadi krithigai Festival 2024 : ஆடிக் கிருத்திகை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் குவிந்து வருவதால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பக்தர்கள் தவிப்பு.

Jul 28, 2024 - 13:41
Jul 29, 2024 - 10:10
 0
ஆடிக்கிருத்திகை.. திருத்தணியில் காவடியுடன் குவிந்த பக்தர்கள்.. எங்கும் எதிரொலிக்கும் அரோகரா முழக்கம்!
aadi krithigai tiruttani murugan temple


Tiruttani Aadi krithigai Festival 2024 : திருத்தணி முருகன் கோவிலில், ஆடி அஸ்வினியுடன், ஆடிக்கிருத்திகை விழா, நேற்று  துவங்கியது.  காவடிகளுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் பாதுகாப்பு எற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கார்த்திகேயனுக்கு உகந்த நட்சத்திரம் கார்த்திகை. வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.  தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் மகா கிருத்திகை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை ஆகிய மூன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவை! 

ஆடிக்கிருத்திகை விழா 29ஆம் தேதியான திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. திருவள்ளூா் மாவட்டத்தில் புகழ்பெற்ற திருத்தணி முருகனின் ஐந்தாம் படை திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாகவும், கோலாகலமாகவும்  கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா நிகழ்ச்சி ஜூலை 27 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. 27ஆம் தேதி சனிக்கிழமை  ஆடி அஸ்வினியுடன் ஆடிக்கிருத்திகை விழா தொடங்கியது. 

இன்று 28ஆம் தேதி ஆடிபரணியை தொடர்ந்து 29ம் தேதி ஆடிக்கிருத்திகை விழா நடக்கிறது. அன்று இரவு சரவண பொய்கை திருக்குளத்தில் முதல்நாள் தெப்பத்திருவிழா நடைபெறும். தொடர்ந்து 3 நாட்கள் தெப்பத்திருவிழா நடை பெற உள்ளது.  இந்நிலையில் இந்த ஆடி திருவிழாவை முன்னிட்டு மலைக் கோவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  

கோவில் உள்பிரகாரத்தில் கொடிமரம் மற்றும் முருகப்பெருமான் மற்றும் நுழைவு வாயிலில் தோரணம் ஆகியவை இரண்டு டன் மலர்களால்  அலங்கரிக்கப்பட்டுள்ளது.  மலைகோவில் வளாகம், சரவணப்பொய்கை, திருக்குளம் மற்றும் மலைப்பாதை முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் வண்ணமயமாக காட்சியளிக்கிறது. 

கோவில் முன்பும் அலங்கார தோரணம் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னுவதால் கண்கொள்ளா காட்சியாக காணப்படுகிறது. ஆடி கிருத்திகை முன்னிட்டு திருத்தணி நகரமே விழா கோலம் கொண்டிருக்கிறது.

கொடியேற்றம் தொடங்கியது முதலே திருத்தணி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் காவடி, அலகு குத்தி வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். அதிகாலை 4 மணியளவில் மூலவர் முருகபெருமானுக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடத்தப் பட்டது. பின்னர் முருகப்பெருமான், வள்ளி-தெய்வாணையுடன் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்துவதற்கு சிறப்பு வசதிகளும், முருக பெருமானை தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு தரிசன வழிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதிக அளவு வெளியூர் பக்தர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் படையெடுத்து மலைக் கோவிலுக்கு வந்ததால் திருத்தணி, அரக்கோணம், சாலை, திருத்தணி ரயில் நிலையம் சாலை, திருத்தணி மார்க்கெட் சாலை, திருத்தணி மலைக்கோயில் அடிவாரப்பகுதி, போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக  போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கியதால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி கோயிலுக்கு வந்த முருக பக்தர்கள், பொதுமக்கள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, கந்தக் கடவுளை வழிபடுவார்கள் ஆறுபடை வீடுகளிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருத்தணியில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow