ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் வெள்ளம் - 2 மாணவிகள் உட்பட 3 பேர் பலி

IAS Students Died in Delhi Coaching Centre : தலைநகர் டெல்லியில் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் ஒன்றில் வெள்ளம் புகுந்ததில் ஓர் மாணவன் மற்றும் இரண்டு மாணவிகள் என மூன்று பேர் உயிரிழந்தனர்.

Jul 28, 2024 - 18:52
Jul 29, 2024 - 15:41
 0
ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் வெள்ளம் - 2 மாணவிகள் உட்பட 3 பேர் பலி
IAS Students Died in Delhi Coaching Centre

IAS Students Died in Delhi Coaching Centre : தொடர் கனமழை காரணமாக, டெல்லியிலுள்ள ராஜேந்திர நகர் எனும் பகுதியில் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் ஒன்றில் வெள்ளம் புகுந்தது. சனிக்கிழமை மாலை ஏழு மணியளவில் அந்த கட்டடத்தின் அடித்தளம் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியது. இதையடுத்து, டெல்லி காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அப்பகுதிக்கு வந்து சிக்கியிருந்தவர்களை மீட்கத் தொடங்கினர்.

மீட்புப் பணி தொடங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு இரண்டு மாணவிகளின் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன. மூன்றாவது மாணவரின் சடலமும் நள்ளிரவில் கண்டெடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. பயிற்சி மைய வெள்ளத்தில் சிக்காமல் சுமார் 30 பேர் அதிருஷ்டவசமாக வெளியேறி உயிர்பிழைத்தனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பயிற்சி மையங்களுக்கு வெளியே தொடர்ச்சியாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எப்போதும் மழை பெய்த உடனேயே அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்துவிடுவதாக அம்மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து கூடுதல் காவல் துணை ஆணையர் சச்சின் ஷர்மா அப்பகுதிக்கு சென்று மாணவர்களை சமாதானம் செய்ய முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிப்பதாகவும் மாணவர்களிடம் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. மாணவர்களின் இறப்பிற்கு ஆம் ஆத்மி கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜக குற்றம்சாட்டி உள்ளது. கடந்த ஒருவார காலமாக சாக்கடையை சுத்தம் செய்யும்படி வலியுறுத்தி வந்ததாகவும், ஆனால், ஆம் ஆத்மி கட்சி பொறுப்பற்று செயல்பட்டதாகவும் பாஜக குற்றம்சாட்டி உள்ளது. ஆனால், நீண்ட காலம் ஆட்சியில் இருந்த பாஜக முறையாக மாநகராட்சிப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

இது குறித்து கூறியுள்ள ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் துர்கேஷ் பதக், இதில் அரசியல் செய்யவேண்டிய அவசியமில்லை. 15 ஆண்டுகளாக கவுன்சிலராக இருந்தபோது, இங்கு ஏன் வடிகால் கட்டவில்லை என்பதை பாஜக விளக்க வேண்டும். ஓர் ஆண்டில் அனைத்து வடிகால்களையும் கட்டிவிட முடியாது” என்றார்.

இதற்கிடையில், டெல்லி அமைச்சர் அதிஷி, இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்து 24 மணிநேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow