BJP Annamalai with Seeman in Dr Palanivelu Book Launch : கோவை ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேலு எழுதிய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமான “GUTS” புத்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது. நூலினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் டாடா குழும தலைவர் சந்திரசேகர் வெளியிட்டனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவத் தலைவருமான ஜிகே மணி, முன்னாள் டிஜிபி ரவி உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “ஒரு மாணவன் டாக்டர் ஆவது என்பது சாதாரண நிகழ்வு. ஆனால் ஒரு தொழிலாளி டாக்டர் ஆவது என்பது மிகப்பெரிய ஒன்றாகும். ஜெம் பழனிவேலு பள்ளிக்கல்வியை இடையில் நின்றவர் மீண்டும் படிப்பை தொடர்ந்து வெற்றியடைந்துள்ளார்” என்று பேசினார்.
டாடா குழும இயக்குனர் சந்திரசேகர் மேடையில் பேசுகையில், “ஒருவர் எங்கு பிறக்கிறார் என்பது முக்கியமில்லை. அவர் எந்த நிலையை அடைகிறார் என்பதிலேயே அவரது வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது. சூழ்நிலைகளை நாம் மாற்ற முடியாது.அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதிலிருந்து தான் வெற்றி கிடைக்கும். டாக்டர் பழனிவேலு, பி.சி.ராய் விருது உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய விருதுகளை பெற்றிருப்பது சாதாரணமானது அல்ல” என்று தெரிவித்தார்.
இறுதியாக விழாவில் பேசிய மருத்துவர் பழனிவேலு, “முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை சந்தித்த போது அவர் எனது வாழ்க்கை வரலாறை எழுத ஊக்குவித்தார். அதனாலேயே வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதினேன். நாமக்கல் மாவட்டத்தில் வறண்ட பகுதியில் பிறந்த எனக்கு, படிக்காவிட்டால் கூலி வேலை செய்யத்தான் போக வேண்டும். அதற்காகத் தான் நான் படித்தேன். எம்.பி.பி.எஸ் படிக்க சீட் கிடைத்தபோது, படிப்பிற்கான கட்டணத்தை எனது கிராமத்தினர் தான் கட்டினார்கள். எனது கல்விக்கு ஆசிரியர்கள் தான் அடித்தளம் அமைத்தனர். எனது வெற்றிக்கு பின்னால் இவர்கள் இருக்கின்றனர் என்பதை நன்றியுடன் தெரிவிக்கவே இந்த புத்தகம் எழுதினேன்” என்றார்,
நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மருத்துவர் பழனிவேல் குறித்து மேடையில் சிறப்புரையாற்றினார். பின்னர், மேடையில் இருந்து இறங்கி வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை ஆரத்தழுவி மகிழ்ந்தார். அரசியலில் எதிரும் புதிருமாக இருந்துவரும், சீமானும் அண்ணாமலையும் ஒருவரை ஒருவர் பரஸ்பரமாக கைகுலுக்கி, கட்டி தழுவிக் கொண்ட சம்பவம் அங்கிருந்த அனைவரது புருவத்தையும் உயர்த்த செய்தது.