ஏழுமலையானை தரிசிக்க போன இடத்தில் டிடிஎஃப் வாசன் சேட்டை.. எச்சரித்த திருமலை திருப்பதி தேவஸ்தானம்

பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிராங்க் வீடியோ வெளியிட்டதை அடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் எச்சரித்துள்ளது. பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் குறும்பு வீடியோ எடுத்து வெளியிட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என TTD நிர்வாகம் அறிவித்துள்ளது.

Jul 12, 2024 - 14:54
Jul 12, 2024 - 15:02
 0
ஏழுமலையானை தரிசிக்க போன இடத்தில் டிடிஎஃப் வாசன் சேட்டை.. எச்சரித்த திருமலை திருப்பதி தேவஸ்தானம்
TTF Vasan At Tirumala Tirupati Devasthanams

யூடியூப் பிரபலமான டிடிஎஃப் வாசன் பைக் சாகசம் செய்வதை வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.  பொது இடங்களுக்கு சென்றாலே இளைஞர்கள் கூட்டம் இவரை சூழ்ந்து கொள்ளும் அளவிற்கு, பைக் சாகசங்களை செய்து,  அந்த  வீடியோக்களை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு பிரபலமானவர்.இவர் மஞ்சள் வீரன் எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். 

சென்னை- பெங்களூர் சாலை விபத்து:

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையிலிருந்து, மகாராஷ்டிராவிற்கு தனது பைக்கில் செல்ல திட்டமிட்ட டிடிஎஃப் வாசன், சென்னை- பெங்களூர் சாலையில் சென்றுள்ளார். அப்போது கார் ஒன்றை முந்தி சாகசம் செய்யும் நோக்கில் அவர் பைக்கை வேகமாக ஓட்ட, திடீரென ஏற்பட்ட விபத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதற்காகவும், கவனக்குறைவாக செயல்பட்டதற்காகவும்,  பாலு செட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். 

பைக் ஓட்ட தடை:

டிடிஎஃப் வாசனுக்கு பைக் ஓட்ட தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மே மாதம் வண்டியூர் சுங்க சாவடி பகுதியில், போன் பேசிக் கொண்டே கார் ஓட்டிய டிடிஎஃப் வாசன், அதனை வீடியோ எடுத்து தனது  யூடியூப் பக்கத்தில் பதிவிட்டார். தகவல் அறிந்த மதுரை அண்ணாநகர் காவல்துறையினர், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

நெட்டிசன்கள் கொதிப்பு: 

ஏற்கனவே அவர் மீது போடப்பட்ட வழக்கில் பத்து ஆண்டுகள் இருசக்கர வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். தினம் தினம் சர்ச்சைகளில் சிக்கி வரும் டிடிஎஃப் வாசனை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வந்தாலும், அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

திருப்பதி கோவில் தரிசனம்: 

இந்நிலையில் நேற்று ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனத்திற்காக டிடிஎஃப் வாசன் தனது நண்பர்களோடு சென்றிருந்தார்.சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த டிடிஎஃப் வாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் மண்டபத்தில் தேவஸ்தான ஊழியர் போல், காத்திருப்பு அறையின் கதவை திறந்து விடுவது போன்று பிராங்க் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். 

டிடிஎஃப் வாசன் சேட்டை:

டிடிஎஃப் வாசனின் இந்த சேட்டைகளை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து திருப்பதி தேவஸ்தானம் போர்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனி மீண்டும் வாசனையும் அவரது நண்பர்களையும் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் கருத்துத் தெரிவித்தனர். இந்நிலையில் தரிசனத்திற்காக காத்திருத்திருந்த பக்தர்களை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட டிடிஎஃப் வாசன் மற்றும் அவரது குழுவினர் மீது திருப்பதி திருமலை தேவஸ்தானம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்துள்ளது. 

திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை:

இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் குறும்பு வீடியோ எடுப்பது கேவலமான செயல். அத்தகைய நபர்கள் மீது  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக டிடிஎஃப் வாசன் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்க தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தான விஜிலன்ஸ் துறை மேற்கொண்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow