சென்னை: கார்த்தி நடிப்பில் 2022ம் ஆண்டு வெளியான சர்தார் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. பிஎஸ் மித்ரன் இயக்கிய இந்தப் படத்தில் கார்த்தியுடன் ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதிகம் எதிர்பார்ப்பில்லாமல் வெளியான இத்திரைப்படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததுடன் பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடி வசூலித்தது. சர்தார் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம்(Sardar Part 2) உருவாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் அதற்குள் கார்த்தி அடுத்தடுத்து சில படங்களில் கமிட்டாகியிருந்தார்.
லோகேஷ் இயக்கத்தில் கைதி 2ம் பாகத்தில் நடிக்கவிருந்ததால் அப்போதைக்கு சர்தார் 2 ஒத்தி வைக்கப்பட்டது. அதேநேரம், ஜப்பான், மெய்யழகன், வா வாத்தியாரே ஆகிய படங்களில் பிஸியாக இருந்தார் கார்த்தி. இந்நிலையில் மெய்யழகன், வா வாத்தியாரே இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரேநேரத்தில் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. இதனையடுத்து சர்தார் 2ம் பாகத்தை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. இயக்குநர் பிஎஸ் மித்ரனும் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை முடித்துவிட்டதால், சர்தார் 2 படப்பிடிப்புக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டார் கார்த்தி.
இதனையடுத்து இன்று சென்னையில் சர்தார் 2 படத்திற்கான பூஜை நிகழ்ச்சி (Sardar 2 Pooja) நடைபெற்றது. அதில், கார்த்தி, அவரது தந்தையும் நடிகருமான சிவகுமார், இயக்குநர் பிஎஸ் மித்ரன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ள படக்குழு, சர்தார் 2 ஷூட்டிங் ஜூலை 15ம் தேதி தொடங்கும் என அறிவித்துள்ளது. இதனால் கார்த்தி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சர்தார் 2ம் பாகம் முடிந்த பின்னரே கைதி 2 பற்றிய அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், மெய்யழகன், வா வாத்தியாரே படங்களின் ரிலீஸ் தேதிக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், சர்தார் 2ம் பாகத்தில் கார்த்தி ஜோடியாக பாலிவுட் ஹீரோயின் ஒருவரை புக் செய்ய படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இன்றைய பூஜை விழா அப்டேட்டில் சர்தார் முதல் பாகம் நாயகிகள் ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, லைலா ஆகியோரின் பெயர்களை படக்குழு டேக் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 15ம் தேதி தொடங்கும் சர்தார் 2 படப்பிடிப்பு இந்தாண்டு இறுதிக்குள் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து இப்படத்தை அடுத்தாண்டு பொங்கல் அல்லது கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு பிளான் செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.