சென்னை: உலகின் ஆகச்சிறந்த கிரிக்கெட் மேதைகளுக்கு பொதுவான சில அடிப்படைப் பண்புகள் உண்டு. ஒரு ஆட்டத்துக்குள் பல ஆட்டங்களை உருவாக்கும் திறன் கொண்டவர்கள் அவர்கள். சச்சின், லாரா, வார்ன் போன்றவர்களுக்கு இந்தக் கலை கைவரப் பெற்றிருந்தது. இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனும் அதே ரகம்தான். இங்கிலாந்து VS எதிரணி என்றில்லாமல் ஆண்டர்சன் Vs எதிரணி என்று ஆட்டத்தை மாற்றும் திராணி கொண்டவர் அவர். 42 வயதிலும் தொடர்ந்து பரீட்சார்த்த முயற்சிகள் செய்வதில் ஆண்டர்சனுக்கு நிகர் அவரே தான். இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு ’wobble seam’ என்று ஒரு பந்தைக் கண்டுபிடித்து எதிரணி பேட்ஸ்மேன்களை பயமுறுத்தினார்; அதே போல Reverse's reverse swing என்ற பந்தைக் கொண்டு வந்து சச்சினின் பாராட்டையும் அள்ளிச் சென்றார்.
”ஆண்டர்சனுக்கு கிரிக்கெட் பந்தை ஸ்விங் செய்வதைக் காட்டிலும் சுடோடு விளையாட்டில் புதிரைக் கண்டுபிடிப்பதில் தான் ஆர்வம் அதிகம்” என்கிறார் அவரது முன்னாள் சகா ஸ்டூவர்ட் பிராட். நவீன கிரிக்கெட்டில் திறமையின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவின் மெக்ராவையும் பாகிஸ்தானின் வாசிம் அக்ரமையும் தான் ஆண்டர்சனுடன் ஒப்பிட முடியும். மெக்ரா, மித வேகப்பந்து வீச்சாளர் என்றாலும் கட்டுக்கோப்பான லைன் & லெங்தில் கவனம் செலுத்தியவர்; அவரிடம் அபாயகரமான பவுன்சர் இருந்தது. வாசிம் அக்ரம், அழகான ரன் அப்பில் தான் நினைத்தபடி பந்தைப் பேசச் செய்யும் மந்திரவாதி; நினைத்தபடி பந்தை ரிவர்ஸ் செய்யும் வித்தைக்காரன். ஆனால், ஆண்டர்சனோ வெறுமனே ஸ்விங்கை மட்டுமே வைத்துக் கொண்டு, டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றி உலகின் முதனிலை வேகப்பந்து வீச்சாளராக முன்னேறியுள்ளார்.
மெக்ரா - வாசிம் போல ஒருநாள் கிரிக்கெட்டில் ஆண்டர்சன் சாதிக்கவில்லை தான். ஆனால், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவருடைய சாதனைகள் ஒன்றும் அவ்வளவு மோசமானவை இல்லை. சிறுவயதில், கிரிக்கெட்டோடு சேர்த்து ரக்பி, கால்பந்து, டென்னிஸ், கோல்ப் என்று பல விளையாட்டுகளை முயன்று பார்த்தவர். குறிப்பாக ஜெர்மனியின் டென்னிஸ் சூப்பர் ஸ்டார் போரிஸ் பெக்கரின் ஆட்டத்தின் மீது அவருக்கு மையலுண்டு. ஆனால் கிரிக்கெட்டில் தான் தன்னுடைய ஆத்ம திருப்தியை காதலை ஆண்டர்சன் கண்டுணர்ந்தார்.
”உண்மையில் நான் ஒரு கூச்ச சுபாபம் கொண்டவன். டேட்டிங்கின் போது காதலியின் எதிர்பார்ப்பு என்னவென்று கூட என்னால் புரிந்துகொள்ள முடியாது. களத்தில் காலெடுத்து வைத்தவுடன், என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நான் முற்றிலும் மறந்துவிடுவேன். அப்போது நான் என்ன செய்கிறேன், என்ன பேசுகிறேன் என்பது எனக்கு நினைவில் இருப்பதில்லை” என்கிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன். ஆண்டர்சனின் நட்பு வட்டம் மிகவும் சுவாரஸ்யமானது. 2014 வரை கிரேம் ஸ்வான் தான் அவருடைய அறைத் தோழர். ஸ்வான் ஒரு குறும்பான மனதர். அதற்கடுத்த படியாக, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் குக்கை சொல்லலாம். குக் ஒரு ஒழுக்கசீலர். நீண்ட காலம் ஆண்டர்சனின் புதிய பந்து பார்ட்னராக இருந்த பிராட், நண்பருக்காக விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர். ஆனால், இவர்களின் எந்தவொரு சாயலும் ஆண்டர்சனுக்கு இல்லை. தன் பந்தில் கேட்சை விட்டால், அது நண்பர் என்றாலும் பொறுத்துக்கொள்ள மாட்டார்.
ஆண்டர்சன் ஒரு மேதை என்றாலும் பிறரிடம் இருந்து நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கு தயங்கியதில்லை. ஸ்டூவர்ட் பிராடிடிம் இருந்து லெக் கட்டரையும் பாகிஸ்தானின் முகமது ஆசிப்பிடம் இருந்து wobble seam-ஐயும் கற்றுக்கொண்டார். கடைசி ஆட்டத்தில் விளையாடும் போது ஆண்டர்சனிடம் இன்னும் தீராத ஆர்வம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சனின் எதிர்காலம் என்னவாக இருக்கப் போகிறது என்று கிரிக்கெட் உலகமும் ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர்.