திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனை சுத்து போட்ட அமலாக்கத்துறை.. ரூ. 908 கோடி அபராதம்..சொத்துக்கள் பறிமுதல்

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ள நிலையில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தலையில் இடியை இறக்கியுள்ளது அமலாக்கத்துறை.

Aug 28, 2024 - 16:23
Aug 29, 2024 - 10:21
 0
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனை சுத்து போட்ட அமலாக்கத்துறை.. ரூ. 908 கோடி அபராதம்..சொத்துக்கள் பறிமுதல்
dmk mp jagathrakshakan

திமுக எம்.பியும் மூத்த நிர்வாகியுமான ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 908 கோடி ரூபாயை அபராதமாக விதித்து அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கை எதிர்கொண்டிருக்கும் ஜெகத்ரட்சகன் வீட்டில் சில மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு அவர் சார்ந்த 89 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


ஜெகத்ரட்சகன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலிங்கமலை என்னும் ஊரில் 1950ல் ஆகஸ்ட் மாதம் பிறந்தார். வழுதாவூரில் பள்ளிக் கல்வியை முடித்த ஜெகத்ரட்சகன், ரயில்வேல் ஊழியராக பணிக்குச் சேர்ந்தார். ஆனால், விரைவிலேயே அரசியல்தான் தனக்குச் சரியாக இருக்கும் எனக் கருதிய ஜெகத்ரட்சகன் எம்.ஜி.ஆர். துவங்கியிருந்த அதிமுகவில் இணைந்தார்.

1980ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே அவருக்குப் போட்டியிடும் வாய்ப்பை அளித்தார் எம்.ஜி.ஆர். வெறும் 30 வயதில் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், அபார வெற்றிபெற்றார். இதற்கடுத்து 1984ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது, அவருக்கு செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பளிக்கப்பட்டது. அதிலும் வெற்றிபெற்ற அவர், அ.தி.மு.கவின் நாடாளுமன்ற கட்சித் தலைவராகவும் இருந்தார். அ.தி.மு.கவிற்குள் அவருக்கு பின்பலமாக அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் இருந்தார்.

எம்.ஜி.ஆர். இறந்தவுடன் அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டபோது, ஜானகி அணியின் பக்கம் சென்றார் ஜெகத்ரட்சகன். 1989ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், படுதோல்வியடைந்தார். அரசியலில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கண்ட ஜெகத்ரட்சகன் திமுகவில் இணைந்த பிறகு வெற்றிப்படிக்கட்டுகளில் மளமளவென ஏறினார். 


தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் பல தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டபோது, இவரும் ஒரு அனுமதியைப் பெற்றார். 1984ல் பாரத் பொறியியல் கல்லூரியைத் துவங்கிய அவர், வெகு சீக்கிரமே அதனை சிறப்பாக வளர்த்தெடுத்தார். 2002ஆம் ஆண்டில் அந்தக் கல்லூரி நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக உயர்த்தப்பட்டது.

இதற்குப் பிறகு 2004ஆம் ஆண்டில் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஸ்ரீ பாலாஜி செவிலியர் கல்லூரி, 2007ஆம் ஆண்டில் புதுச்சேரியில் ஸ்ரீ இலட்சுமி நாராயணா மருத்துவ அறிவியல் கழகம் 2002ல் ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, 2007ல் ஸ்ரீ பாலாஜி இயன்முறை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றைத் துவங்கினார்.

1999ல் நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு, ஒரு மதுபான ஆலையையும் துவங்கினார் ஜெகத்ரட்சகன். இதற்குப் பிறகு நட்சத்திர ஹோட்டல்கள், மருந்து நிறுவனங்கள் என அவரது சொத்துக்கள் அதிகரித்தன. கடந்த 2020ஆம் ஆண்டு சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இந்தச் சோதனைகளுக்குப் பிறகு, ஃபெரா சட்டத்தின் கீழ் அவர் தொடர்புடைய ரூ. 89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த ஆண்டு அக்டோபர்  வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில் பல்வேறு ஆவணங்களும் கோடிக்கணக்கான ரூபாய் பணமும் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியன.ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 

இதனிடையே ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 908 கோடி ரூபாயை அபராதமாக விதித்து அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கை எதிர்கொண்டிருக்கும் ஜெகத்ரட்சகன் வீட்டில் சில மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு அவர் சார்ந்த 89 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றிருக்கும் நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow