விக்கிரவாண்டியில் விஜய் கட்சியின் முதல் மாநில மாநாடு.. செப்.23ல் மாஸ் காட்ட தயாராகும் தவெக நிர்வாகிகள்

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை விஜய் கட்சியின் தொண்டர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறும் இடத்திற்கான அனுமதி, காவல்துறை பாதுகாப்பு கோரி பொதுச்செயலாளர்  ஆனந்த்  விழுப்புரம் எஸ் பி அலுவலகத்தில்  மனு அளித்துள்ளனர்.

Aug 28, 2024 - 11:26
Aug 29, 2024 - 10:24
 0
விக்கிரவாண்டியில் விஜய் கட்சியின் முதல் மாநில மாநாடு.. செப்.23ல் மாஸ் காட்ட தயாராகும் தவெக நிர்வாகிகள்
tamilaga vettri kazhagam chief vijay

தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி, தனது புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார் விஜய். ஆறு மாதங்களுக்குப் பிறகு கடந்த 22ஆம் தேதியன்று தமிழக வெற்றிக்கொடியினை அறிமுகம் செய்து வைத்தார். மஞ்சள், சிவப்பு நிற கொடியில் யானைகள், வாகைப்பூ இடம் பெற்றுள்ளது.கொடி அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே சர்ச்சை உருவாகியுள்ளது. அதற்குக் காரணம் கொடியில் இருந்த யானைதான். 

கட்சியின் முதல் மாநாட்டை வரும் செப்டம்பர் மாதம் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தார். மாநாட்டுக்கான இடத்தைத் தேர்வு செய்யும் பொறுப்பு, கட்சியின் பொதுச்செயலாளரான பாண்டிச்சேரி ஆனந்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முதலில், ஈரோடு மாவட்டத்தில்தான் மாநாடு நடத்துவதற்கு இடம் பார்க்கப்பட்டது. 'பெரியார் பிறந்த மண்' என்கிற அடிப்படையில், கட்சியின் தொடக்க விழாவை அங்கிருந்து தொடங்கவும் ஆலோசிக்கப்பட்டது. 

தென்மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு போதிய போக்குவரத்து வசதிகள் கிடைக்காது. தவிர, நாம் எதிர்பார்க்கும் அளவில் ஈரோட்டில் இடமும் கிடைக்கவில்லை எனக் கட்சியிலுள்ள சீனியர் நிர்வாகிகள் ஆலோசனை சொல்லவும், மதுரையிலும் திருச்சியிலும் இடம் பார்க்கச் சொல்லியிருக்கிறார் விஜய். அதற்காக கடந்த ஒரு மாதமாக திருச்சி, மதுரையில் சுற்றிவந்தார் பாண்டிச்சேரி ஆனந்த். திருச்சி பொன்மலையிலுள்ள ரயில்வே மைதானத்தை வாடகைக்கு எடுக்கவும் பேசப்பட்டது. தொண்டர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாது என்பதால்  விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் த.வெ.கவின் முதல் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாம். 

விக்கிரவாண்டியில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சூர்யா கல்லூரி அருகே இடம் இருப்பதாகத் தெரிந்தது. அந்த இடம், சென்னை - திருச்சி நெடுஞ்சாலைக்கு அருகிலேயே அமைந்திருப்பதாலும், மழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படுத்தாத மண்ணோடு இருப்பதாலும் அதையே தேர்வு செய்தார் ஆனந்த். தொடக்கத்திலிருந்தே, செப்டம்பரில் மாநாடு நடத்துவதில் ஆனந்துக்கு உடன்பாடே இல்லையாம். 'மழைக்காலத்தில் மாநாடெல்லாம் வேண்டாம். அடுத்தாண்டு ஜனவரியில் நடத்திக் கொள்ளலாம்' என விஜய்யிடம் பேசிப் பார்த்தார் ஆனந்த். ஆனால் செப்டம்பரில் மாநாட்டை நடத்துவதிலிருந்து விஜய் பின்வாங்கவில்லையாம்.  இதனையடுத்தே செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி மாநாடுக்கான தேதியாகக் குறிக்கப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் 23ஆம் தேதியன்று முருகனுக்கு உகந்த சஷ்டி திதி என்பதால், அன்றைய தினமே மாநாட்டை நடத்த பாண்டிச்சேரி ஆனந்த் தான் தனது ஆஸ்தான ஜோதிடர் மூலமாக தேதி குறித்துள்ளாராம். செப்டம்பர் மாதம் முதல் மாநாட்டை நடத்துவதில் விஜய் உறுதியாக இருப்பதால், அதற்கான பணிகளை இப்போதிருந்தே தொடங்கிவிட்டனர் த.வெ.க கட்சியினர். எந்தெந்த தீர்மானங்களை நிறைவேற்றுவது, அதை மேடையில் யார் வாசிப்பது என்கிற பட்டியலும் தயாராகி வருகிறது. இதனிடையே விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறும் இடத்திற்கான அனுமதி, காவல்துறை பாதுகாப்பு கோரி பொதுச்செயலாளர்  ஆனந்த்  விழுப்புரம் எஸ் பி அலுவலகத்தில்  ஏடி எஸ் பி திருமாலிடம் மனு அளித்தனர். இதனையடுத்து 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

நடிகர் விஜய் தனது கட்சியை பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கிய  நிலையில் ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். செப்டம்பர்  23ஆம் தேதியன்று தவெகவின் முதல் மாநாட்டினை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாநாடு நடைபெறும் நாளுக்கு ஒருநாள் முன்னதாகவே விழுப்புரத்திற்கு வரும் விஜய் அங்கேயே தங்கியிருந்து மாநாடுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை மேற்கொள்கிறார். மாநாட்டை மாலை 3 மணிக்குத் தொடங்கவும் மாலை 6 மணிக்கு விஜய் உரை நிகழ்த்தவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் நலன் சார்ந்தும், உரிமை சார்ந்தும் 18 தீர்மானங்கள் வரை மாநாட்டில் நிறைவேற்ற ஆலோசிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசைக் கண்டித்தும் சில தீர்மானங்கள் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow