கேரளாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் இதுதான் வித்தியாசம்.. பாலியல் விவகாரம் குறித்து பாடகி சின்மயி கருத்து..

மலையாள திரையுலகில் நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஹேமா கமிட்டி அளித்துள்ள அறிக்கையை அடுத்து, கேரள அரசின் நடவடிக்கைகள் குறித்து பாடகி சின்மயி கருத்து தெரிவித்துள்ளார்.

Aug 28, 2024 - 11:34
Aug 29, 2024 - 10:24
 0
கேரளாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் இதுதான் வித்தியாசம்.. பாலியல் விவகாரம் குறித்து பாடகி சின்மயி கருத்து..

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2017-ம் ஆண்டு நடிகா் திலீப் உள்ளிட்ட பலா் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றச்சாட்டப்பட்டனா். இதைத் தொடர்ந்து கேரள திரைப்படத் துறையில் பாலியல் துன்புறுத்தல் குறித்த பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக, நீதிபதி ஹேமா தலைமையில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. இதனையடுத்து முறையாக ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை சமர்பித்தது ஹேமா கமிட்டி.

அந்த அறிக்கையில் மலையாள திரை உலகத்தில் உள்ள பெண்கள் பெரும்பாலும் பயம் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை எதிர்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. சூட்டிங் செல்லும் இடத்தில் நடக்கும் மோசமான சம்பவங்களைத் தவிர்க்கவே பலர் தங்கள் பெற்றோரை அல்லது உறவினர்களை உடன் அழைத்துச் செல்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

சூட்டிங் செல்லும் இடங்களில் நடிகர்கள் ஹோட்டல் அறைகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயல்வது உட்பட பல மோசமான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளன. இவ்வளவு மோசமான நிலைமை இருந்தும் இதுகுறித்து பலரும் புகார் அளிப்பதில்லை. படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம் காரணமாகவும், சமூகத்தில் என்ன நினைப்பார்களோ என்ற அச்சம் காரணமாகவும் பாலியல் சுரண்டலில் ஈடுபவர்களுக்கு எதிராக பலரும் புகாரளிக்கத் தயங்குகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும், கேரளா சினிமா துறையில் சில கிரிமினல்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்களுக்காக இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் நடிகைகளை அட்ஜெஸ்மெண்ட் செய்ய வலியுறுத்துவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி மலையாள திரையுலகில் நடிகர், நடிகைகளுக்கு சம ஊதியம் என்பது வழங்கப்படுவதில்லை. அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதி கூட நடிகைகளுக்கு இல்லை. சூட்டிங்கின் போது பெண்கள் தண்ணீர் குடிப்பதையே தவிர்த்து விடுகிறார்களாம் என்றெல்லாம் கமிட்டி அளித்த அறிக்கையில் கூறப்பட்டது பரபரப்பை கிளப்பியது.

இதுகுறித்து, மலையாள நடிகர் சங்க தலைவரான மோகன்லால் விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வந்தன. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் நடிகர் சங்க அமைப்பான ‘அம்மா’-வில் இருந்து தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மோகன்லால். இவரைத் தொடர்ந்து மலையாள நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த நடிகர் சித்திக், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதற்கிடையில், மீடூ [Me Too] சர்ச்சையில் தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பியவர் பாடகி சின்மயி. கவிஞர் வைரமுத்து, கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் உள்ளிட்ட பலர் மீது, அவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார். கடந்த ஆண்டு, பாஜக அமைச்சர் மீது மல்யுத்த வீராங்கனைகள் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்திலும் தனது கருத்தினை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், மலையாள திரையுலகில் நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஹேமா கமிட்டி அளித்துள்ள அறிக்கையை அடுத்து, கேரள அரசின் நடவடிக்கைகள் குறித்து பாடகி சின்மயி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், பாலியல் குற்றச்சாட்டை எழுந்ததை அடுத்து, அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளதையும், தமிழ்நாட்டும் பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள நபர், முதலமைச்சருடன் நெருக்கமாக உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow