பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு ஒரு ஆட்சியை நடத்துகிறீர்கள்- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, படிக்கும் பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு ஒரு ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

Feb 7, 2025 - 13:38
Feb 7, 2025 - 15:07
 0
பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு ஒரு ஆட்சியை நடத்துகிறீர்கள்- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
எடப்பாடி பழனிசாமி- மு.க.ஸ்டாலின்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செயல்பட்டு வரும் தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு சுதா என்பவர் பள்ளி தாளாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவரும், பள்ளியின் அறங்காவலருமான வசந்தகுமார் என்பவர் 4-ஆம் வகுப்பு மாணவியிடம் வகுப்பறையிலேயே பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவி தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அம்மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குச் சென்று வசந்த குமாரிடம் தட்டிக் கேட்டுள்ளனர். மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களைப் பொதுமக்கள் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.

வசந்தகுமாரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த உறவினர்கள் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வரைக் கைது செய்யக்கோரி  திருச்சி - திண்டுக்கல் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  இந்த விவகாரம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் சுதா உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்த நிலையில் ஒருவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “திருச்சி மாவட்டம் மணப்பாறையில்,  4-ஆம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது.

பெண்கள், குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் எந்த விதமான அச்சமும் இன்றி அதிகரித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது; இது கடும் கண்டனத்திற்குரியது. மு.க.ஸ்டாலின் அவர்களே - பல்வேறு குற்றச்செயல்கள் நடந்து வரும் இவ்வேளையில்  விளம்பர போட்டோ ஷூட்டிங் சுற்றுலாவில் நீங்கள் இருப்பது ரோம் நகரம் எரிந்து கொண்டிருக்கும் வேளையில், நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல உள்ளது.

ஒரு 4-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, படிக்கும் பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு ஒரு ஆட்சியை நடத்துகிறீர்கள். உங்கள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் மாவட்டத்தில் நடந்திருக்கக் கூடிய இந்த கொடுமைக்கு  என்ன பதில் வைத்திருக்கிறது ஸ்டாலின் மாடல் ஆட்சி? மேலும் அதே பள்ளியில் பயிலும் மற்றொரு மாணவியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் , அவர் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் செய்திகள் வருகிறது.

எனவே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மட்டும்தான் இக்குற்றச்சாட்டில் தொடர்பு உள்ளவர்களா ? மற்றும் வேறு பலர் உள்ளார்களா என முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ள அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow