பெண்கள் விளையாட்டில் திருநங்கைகள் பங்கேற்க தடை.. கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்
பெண்கள், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்பதை தடை செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 20-ஆம் தேதி அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவரின் நடவடிக்கைகள் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அடுத்தது என்ன செய்ய காத்திருக்கிறாரோ என்ற மனநிலையில் மக்கள் இருக்கின்றனர். இவரது உத்தரவுகளுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, திருநங்கைகள், பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். அதாவது, பிறப்பால் ஆணாக பிறந்து திருநங்கைகளாக மாறியவர்கள் பெண்கள், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதை தடை செய்யும் உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவில் ஆண் மற்றும் பெண் பாலினங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமானது என்ற உத்தரவையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த சட்டம் அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை பின்பற்றாத பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசின் நிதியுதவிகள் வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடியேறிவர்களை நாடு கடத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், பிரேசில், மெக்சிகோ, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் குடிமக்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். அதன்படி, சி-17 என்ற ராணுவ விமானத்தில் 104 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.
பஞ்சாப்பின் அமிர்தசரஸில் வந்திறங்கிய இந்தியர்கள், தங்களை அமெரிக்க அதிகாரிகள் கன்னியக்குறைவாக நடத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியர்களை கைகளில் விலங்கிட்டு, கால்களில் சங்கிலியால் கட்டி ராணுவ விமானத்தில் ஏற்றிய வீடியோவை அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை அதிகாரி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முன்னதாக தேர்தல் பிரசாரத்தின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றி அமெரிக்காவை தங்களுக்கானதாக மாற்றுவேன் என்று தெரிவித்திருந்தார். மேலும், ‘திருநங்கைகள் என்னும் பைத்தியகாரத் தனத்தை முடிவுக்கு கொண்டு வருவேன்’ என்றும் கூறியிருந்தார். தற்போது அதிபராக பதவியேற்ற பின் டொனால்ட் டிரம்ப், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
What's Your Reaction?