’சர்தார் 2’ திரைப்படத்தை பயன்படுத்தி நூதன முறையில் மோசடி.. தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி
’சர்தார் 2’ திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி மர்ம நபர்கள் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஷால் நடித்த 'இரும்புத்திரை' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் பி.எஸ்.மித்ரன். தொடர்ந்து, ‘ஹீரோ’, ‘சர்தார்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இதையடுத்து ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் கார்த்திக், எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க: நாட்டின் அடையாளத்தை மாற்ற மருத்துவர்கள் உதவ வேண்டும்- ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
இந்நிலையில், 'சர்தார் 2' திரைப்படத்தில் பட வாய்ப்பு அளிப்பதாக கூறி திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்களிடம் நூதன முறையில் மோசடி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ‘சர்தார் 2’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனர் லட்சுமண் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ’சர்தார் 2’ படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் அதற்கு பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என பல்வேறு திரைப்பிரபலங்களிடமும், பொதுமக்களிடமும் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட முயல்வதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக சட்டப்பூர்வ குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபோன்று தங்களது நிறுவனத்தை பயன்படுத்தி மோசடி அழைப்புகள் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சைபர் கிரைம் மோசடி உள்ளிட்ட மோசடிகள் குறித்து படம் இயக்கும் இயக்குநர் பி.எஸ்.மித்திரனின் திரைப்படத்திலேயே பட வாய்ப்பு எனக் கூறி திரைப் பிரபலங்களை மோசடி செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?