குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்த சச்சின்.. டீ ஷர்டை நினைவு பரிசாக வழங்கினார்
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்த சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் அணிந்து விளையாடிய ஜெர்சியில் கையெழுத்திட்டு அதனை அவருக்கு பரிசாக வழங்கினார்.
கடந்த 1989-ம் ஆண்டு தனது 16 வயதில் இந்திய அணிக்காக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் அறிமுகமானார். இவர் கிரிக்கெட் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் அங்கம் வகித்திருந்தார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 200 டெஸ்ட் மற்றும் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் வடிவில் அதிக எண்ணிக்கையிலான போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் அவர் 15 ஆயிரத்து 921 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரத்து 426 ரன்களும் குவித்துள்ளார். இருப்பினும், அவர் இந்திய அணிக்காக ஒரே ஒரு டி 20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். 24 வருடங்கள் இந்திய கிரிக்கெட்டுக்காக சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனையை பாராட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கெளரவித்தது.
அதாவது, பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த 1994-ம் ஆண்டு இந்திய அணியின் முதல் கேப்டன் சி.கே.நாயுடுவை கெளரவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்த விருதினைப் பெறும் 31-வது நபர் சச்சின் டெண்டுல்கர் ஆவார்.
இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், குடியரசுத் தலைவர் திரெளபதி ராஷ்டிரபதி பவனில் சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் அணிந்து விளையாடிய ஜெர்சியில் கையெழுத்திட்டு அதனை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிற்கு நினைவு பரிசாக வழங்கினார். இந்த சந்திப்பின் போது சச்சின் டெண்டுல்கரின் குடும்பத்தாரும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?