உ.பி.யில் சோகம்: பேருந்து-லாரி மோதி 18 தொழிலாளர்கள் பலி... பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

அதிவேகமாக சென்ற பேருந்து ஒரு வளைவில் முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்றதே விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. பேருந்து ஓட்டுநர் மற்றும் பால் லாரி ஓட்டுநர் என இருவரும் விபத்தில் இறந்து விட்டனர்.

Jul 10, 2024 - 11:24
Jul 10, 2024 - 11:51
 0
உ.பி.யில் சோகம்: பேருந்து-லாரி மோதி 18 தொழிலாளர்கள் பலி... பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!
Uttar Pradesh Bus Accident

லக்னோ: பீகார் மாநிலத்தில் இருந்து டெல்லி நோக்கி படுக்கை வசதி கொண்ட டபுள் டெக்கர் பேருந்து ஒன்று நேரு இரவு புறப்பட்டது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்தனர். 

இந்த பேருந்து இன்று அதிகாலை லக்னோ-ஆக்ரா விரைவுச் சாலையில் உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் கதா கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த பால் லாரியும், பேருந்தும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.

மோதிய வேகத்தில் பேருந்து முழுமையாக சேதம் அடைந்தது. பேருந்தின் உள்ளே இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பேருந்து அதிவேகமாக சென்று ஒரு வளைவில் முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்றதே விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. பேருந்து ஓட்டுநர் மற்றும் பால் லாரி ஓட்டுநர் என இருவரும் விபத்தில் இறந்து விட்டனர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உயர் அதிகாரிகளை உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்ல உத்தரவிட்டார்.  உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு  ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். தரமான சிகிச்சை வழங்கப்படும் என்று அவர்களிடம் உறுதி அளித்தார். 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000மும் பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டார்.

இதேபோல் குடியரத் தலைவர் திரெளபதி முர்மு, '' உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் சாலை விபத்தில் பலர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.

மேலும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ''உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் பலியான ஆழ்ந்த இரங்கலை காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் தொண்டர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow