ஓப்பனிங் நல்லாதான் இருக்கு.. ஆனால் ஃபினிஷிங்.. தவெக மாநாடு குறித்து சீமான்

தொடக்கம் சரியாகத்தான் இருக்கிறது, போக போகத்தான் தெரியும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக மாநாடு குறித்து கூறியுள்ளார்.

Oct 26, 2024 - 19:57
Oct 26, 2024 - 20:16
 0
ஓப்பனிங் நல்லாதான் இருக்கு.. ஆனால் ஃபினிஷிங்.. தவெக மாநாடு குறித்து சீமான்
தொடக்கம் சரியாகத்தான் இருக்கிறது - சீமான்

திண்டுக்கல், தேனியில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும், மருது பாண்டியர்கள் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதற்காகவும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், தவெக மாநாட்டில் தமிழ் மன்னர்களுக்கு வைக்கப்பட்டுள்ள கட்-அவுட் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பதிலளித்த சீமான், “அதையெல்லாம் எடுத்துவிட்டு பின்னர் மராட்டியர்கள் படத்தையா  வைக்க முடியும். நான் வரவேற்கிறேன். இதைத்தானே வைக்க வேண்டும். நான் வைக்கும்போது என்னிடம் யாரும் கேட்கவில்லை. பெருமைமிகு முன்னோர்கள் இருக்கிறார்கள், அரசியல் தலைமைகள் உள்ளனர். அதை செய்யும்போது பெருமைதான்” என்றார்.

விஜய் சரியான பாதையில் பயணிக்கிறார் என திருமாவளவன் கூறியது குறித்த கேள்விக்கு, “தொடக்கம் சரியாகத்தான் இருக்கிறது, போக போகத்தான் தெரியும். நீங்கள் பெரியாருக்கு மாலை போடும் போது அதை சொல்லவில்லையே. அது அவரது கடமை. நான் சேர, சோழ, பாண்டியர் பரம்பரையில் வந்தவன். நான் என் முன்னோரை போற்ற வேண்டும். சுபாஷ் சந்திர போஸுக்கு இங்கே பெயரோ, சிலையோ இல்லாமல் இருக்கிறதா அதை கொண்டு வந்தவர் எங்க தாத்தா முத்துராமலிங்க தேவர்.

ஆனால் மேற்கு வங்கத்திலோ, வட இந்தியாவிலும் அவருக்கு பெயரோ, சிலையோ உண்டா நீங்கள் சொல்லுங்கள். அப்ப நாங்க சுதந்திரத்துக்கு போராடாமல், வேற எதற்காக போராடினோம்? எதற்கு நாங்கள் நிராகரிக்கப்பட்டோமோ, அங்கே எழுந்து நிற்க வேண்டும். அதற்கு அவசியம் இருக்கிறது” என தெரிவித்தார்.

மதுரையில் பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், “நான் சொல்லியா மழை பெய்தது. இதை நீங்கள் என்னிடம் கேட்க கூடாது. என்னிடம் கேட்டு என்ன ஆகப்போகிறது. முதல்வரிடம் வலியுறுத்தி என்ன ஆகப்போகிறது, நேற்று கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வந்திருந்தால் சரி என்று சொல்லலாம். நீங்கள் எத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்கிறீர்கள்?ஐந்து முறை, ஆறு முறை ஆண்டு விட்டீர்கள்.

60 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? எங்களை மாதிரி நபர்களிடம் ஏன் கேள்வி கேட்கிறீர்கள். முதன்மையான நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு இல்லை. மாநகராட்சிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினார்கள்? நீர் வடிந்து ஓரிடத்தில் சேமிப்பதற்கு ஒரு திட்டம் இந்த நாட்டில் உள்ளதா? ஒரு நாள் மழைக்கு இந்த நிலைமையினால் தொடர்ச்சியாக மூன்று நாள் மழை பெய்தால் என்ன செய்வீர்கள்?

கேட்டால் நல்லாட்சி என்பீர்கள். நீங்கள் சென்னைக்கு வந்து பாருங்கள் நல்ல வேலையாக தப்பிச்சோம் என்று சொல்ல முடியாது. நாங்கள் பரிசல், துடுப்பு எல்லாம் வாங்கி வைத்திருந்தோம். தப்பித்து கரைக்கு போவதற்காக. அவ்வளவு தூரம் தண்ணீர் தேங்கி இருந்தது.

உதயநிதியின் தந்தையும் [மு.க.ஸ்டாலின்] துணை முதல்வராக இருந்தபோது களத்தில் இறங்கி பணியாற்றினார். ரூ.4000 கோடி ஒதுக்கி 90 சதவீதம் கட்டமைப்பை முடித்து விட்டோம் என்று சொல்கிறீர்கள். பிறகு ஏன், தேங்கிய நீரை இறைப்பதற்கு 1800 விசை இயந்திரங்கள் பயன்படுத்தினீர்கள். அப்படியென்றால் அடிப்படை கட்டமைப்பு வசதி செய்யவில்லை, அப்படித்தானே? வேலை செய்வது என்பது வேறு; வேலை செய்வது மாதிரி நடிப்பது என்பது வேறு. கடமையை செய்வது என்பது வேறு, கடமைக்கு செய்வது என்பது வேறு” என்று கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow