தவெக மாநாடு.. விஜய் பெற்றோர் அன்னதானம் வழங்கி சிறப்பு பூஜை!
தவெக மாநாடு வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்றும் தமிழ்நாட்டிற்கு ஒரு பொக்கிஷம் கிடைக்க வேண்டும் எனவும் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே, அதிலிருந்து விலகி அரசியலில் களமிறங்க முடிவு செய்துள்ளார் தளபதி விஜய். அதன்படி, 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட விஜய் மக்கள் இயக்கம், தற்போது தமிழக வெற்றிக் கழகமாக மாறியுள்ளது. இந்தாண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக அறிவித்த விஜய், தற்போது அதன் முதல் மாநில மாநாட்டுக்கான வேலைகளில் பிஸியாக காணப்படுகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் வரும் 27ம் தேதி தவெக மாநாடு நடைபெறுகிறது. இதற்காக 100 ஏக்கருக்கும் அதிகமான இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ள தவெக, அதில் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில் தவெக மாநாடு மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற வேண்டும் என சென்னை கொரட்டூர் வெங்கடேஷ்வரா நகரில் உள்ள தங்களுக்கு சொந்தமான சாய்பாபா கோயிலில் விஜய்யின் பெற்றோர் சந்திரசேகர் மற்றும் ஷோபா சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும் ஏழை, அளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகர், “தவெக மாநாடு வெற்றிகரமாக நடைபெற வேண்டும். தளபதிக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும். அவர் பெரிய நிலமைக்கு வர வேண்டும். தமிழ்நாட்டிற்கு ஒரு பொக்கிஷம் கிடைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, விஜய்யின் நெருங்கிய நண்பரும் திரைப்பட நடிகருமான தாடி பாலாஜி காஞ்சிபுரம் குபேரன் திருக்கோயிலில் இன்று (அக். 24) தவெக கொடி, பேட்ச் உள்ளிட்டவை பூஜையில் வைத்து விஜய் முழு பெயரான ஜோசப் விஜய் பெயரிலும், தமிழக வெற்றி கழகத்தின் பெயரிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டார். இதனையடுத்து திருக்கோயிலை 9 சுற்றுகள் வலம் வந்து மாநாடு வெற்றி பெற மனமுருகி வழிபட்டார்.
இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் தனது நெருங்கிய நண்பர் எனவும் அவரது செயல் தனக்கு பிடிக்கும் எனவும் மாநாடு மட்டுமின்றி விஜய் அனைத்திலும் வெற்றி பெற தன்னால் முடிந்த சிறு பூஜையை மேற்கொண்டதாக தெரிவித்தார். மேலும் பலரும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தந்து வருவதாகவும், இன்னும் கொடுக்கவிருப்பதாகவும் தெரிவித்த அவர் தமிழக வெற்றி கழக தலைவரும், நண்பருமான விஜய்க்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்பு இந்த வயதிலும் கட்சிக்காக உழைக்கும் புஸ்ஸி ஆனந்த் அண்ணன் ஆரோக்கியமாக இருக்க வேண்டியதாகவும் தெரிவித்தார்.
What's Your Reaction?