என்கவுன்டர் கொலைகள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் இனிமேல் என்கவுண்டர் கொலைகள் செய்யக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

Sep 24, 2024 - 19:34
Sep 24, 2024 - 19:56
 0
என்கவுன்டர் கொலைகள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!
என்கவுண்டர் கொலைகள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், “தமிழ்நாட்டில் என்கவுன்டர் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் 3 பேர் என்கவுண்டரால் கொல்லப்பட்டுள்ளனர். இது தற்செயலானதல்ல. நீதிமன்றங்களால் வழங்கப்படும் மரண தண்டனைகளையே ஒழிக்க வேண்டுமென உலகம் முழுவதும் கருத்துக்கள் மேலெழுந்து வரும் நிலையில் குற்றவாளிகள் என கருதப்படுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் அதிகாரத்தை காவல்துறையினர் எடுத்துக் கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது.

என்கவுன்டர்களில் கொல்லப்பட்டவர்கள் கடுமையான குற்றங்களில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கூறி விசாரணையின்றி கொல்லப்படுவதை நியாயப்படுத்த முடியாது. எத்தகைய மோசமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானாலும் அவர் கைது செய்யப்பட்டு உரிய விசாரணைகள் மேற்கொண்டு நீதிமன்றங்கள் மூலம் தண்டனை பெற்றுத்தர வேண்டுமே தவிர, காவல்துறை சட்டத்தை கையிலெடுப்பது சரியல்ல. தமிழ்நாட்டில் இதற்கு முன்பு பல என்கவுண்டர்கள் நடந்துள்ளன. இதனால் ரவுடியிசம் ஒழியவில்லை. மாறாக, வளர்ந்த வண்ணம் தான் உள்ளது. சமூக விரோத சக்திகள் வளருவதற்கும், ரவுடியிசம் செய்வதற்கும் காவல்துறையினரின் மெத்தனப்போக்கும், அலட்சியமுமே முக்கிய காரணமாகும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

என்கவுன்டர்கள் குற்றங்களை குறைத்து விடும் என்றால் இந்நேரம் கொலைகள் குறைந்திருக்க வேண்டும். காவல்துறையினர் தங்கு தடையற்ற அதிகாரத்தை எடுத்துக் கொள்வதும் அவர்களே மரண தண்டனையை நிறைவேற்றுவதையும் சட்டத்தின் ஆட்சியில் அனுமதிக்கவே முடியாது. இவையெல்லாம் தற்காப்புக்காக நடத்தப்பட்டவை என்று சொல்வது நம்பும் படியாக இல்லை. அதுபோல் கைது செய்யப்படுபவர்கள் கழிவறையில் வழுக்கி விழுந்ததால் கை, கால்கள் முறிந்துவிட்டது என்று கூறுவது சிறைச்சாலைகளில் நடக்கும் சித்தரவதைகள் தான் என்பதை மறுக்க இயலாது.  இதற்கு முன்னர் நடந்த ஒரு என்கவுன்டர் கொலையைப் பற்றி ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த முன்னாள் டிஜிபி ஒருவர் சம்பந்தப்பட்டவர் 14 ஆண்டுகளுக்கு முன்பாகவே தங்களின் கிட் லிஸ்ட்டில் இருந்ததாக தெரிவித்திருப்பதே இந்த என்கவுண்டர்கள் எல்லாம் திட்டமிட்டு நடத்தப்படுபவைகள் என்பதற்கான சாட்சியங்களாக அமைந்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் அரசுக்கு கெட்ட பெயரையே உருவாக்கும்.

மேலும் படிக்க: Samsung Galaxy S25 Ultra... ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு ஹேப்பியான செய்தி!

எனவே, தமிழக அரசு இந்த என்கவுன்டர்கள் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும், இனிமேல் என்கவுண்டர் கொலைகள் செய்யக்கூடாது என காவல்துறைக்கு உறுதியாக ஆணையிட வேண்டுமெனவும், இதற்கு காரணமான காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றங்கள் மூலம் உரிய தண்டனைகள் பெற்றுத் தருவதை உறுதி செய்யுமாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow