'பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்து போடுங்கள்'.. தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிபந்தனை.. பரபரப்பு கடிதம்!
''நமது குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை மலிவான அரசியல் ஒருபோதும் மறைத்து விடக்கூடாது ஆகவே அரசியல் வேறுபாடுகளை மறந்து நமது குழந்தைகள் உலகத்தரமான கல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை கொடுக்க வேண்டும்'' என்று தர்மோந்திர பிரதான் கூறியுள்ளார்.
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தியாவில் புதிய தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தது. தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு புதிய கல்விக் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும் தமிழ்நாட்டுக்கு என்று தனியாக ஒரு கல்வி கொள்கையை திமுக அரசு கொண்டு வந்துள்ளது. தேசிய கல்வி கொள்கையின் கீழ் 'பிஎம் ஸ்ரீ' பள்ளி என்ற திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் 'பிஎம் ஸ்ரீ' திட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் இணைய மறுத்து விட்டன.
இதனால் மேற்கண்ட மாநிலங்களுக்கு ‘சமக்ரா சிக் ஷா’ திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் நிதியை மத்திய அரசு அதிரடியாக நிறுத்தியது. தமிழ்நாட்டுக்கும் ‘சமக்ரா சிக் ஷா’ திட்டத்தின்கீழ் மத்திய அரசு தரவேண்டிய நிலுவைத் தொகையை இதுவரை வழங்கப்படவில்லை. 'பிஎம் ஸ்ரீ' திட்டத்தில் சேர்ந்தால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கப்படும் என மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''தமிழகம் உட்பட சில மாநிலங்களில் ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய முதல் தவணை நிதி விடுவிக்கப்படவில்லை. இது பள்ளிக் கல்வித் துறையில் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் முதன்மையான திட்டமாகும்.
‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தில் முதல் தவணையான ரூ.573 கோடியை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர முந்தைய ஆண்டுக்கான ரூ.249 கோடியையும் மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இது குறித்து தமிழகத்தின் எம்பி.க்கள் குழு, மத்திய கல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்தும் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை'' என்று கூறியிருந்தார்.
இதேபோல் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியை வழங்க வேண்டும்; கல்வியில் அரசியல் செய்யக்கூடாது என்று அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு 'பிஎம் ஸ்ரீ' திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மோந்திர பிரதான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ''பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையொப்பமிடுவதாக கடந்த 15.03.2024ல் தமிழ்நாடு உறுதி அளித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு அரசு பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். நாட்டின் வடக்கில் இருந்து தெற்கிலும், இதேபோல் கிழக்கில் இருந்து மேற்கிலும் ஒவ்வொரு மூலையிலும், நாட்டின் ஒவ்வொரு குழந்தைக்கும் தேசிய கல்விக் கொள்கை மூலம் நன்மைகள் கிடப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
தமிழ்நாட்டில் லட்சணக்கான மாணவர்கள் ‘சமக்ரா சிக் ஷா’ திட்டத்தின்கீழ் பலன்பெற்று வருகின்றனர். 2023-24 நிதியாண்டில் ‘சமக்ரா சிக் ஷா’ திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ.1,876.15 கோடியை விடுவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்த திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு ரூ.4305.66 கோடி நிதியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய கல்விக்கொள்கை மாநிலங்களின் தாய் மொழியை கற்பிக்க ஊக்குவிக்கிறது. இதேபோல் தமிழ்நாட்டு பள்ளிகளில் தமிழ் மொழியில் பாடங்கள் கற்பிக்கப்படுவதை தேசியக் கல்வி கொள்கை முழுமையாக ஆதரிக்கிறது.
ஆகவே தமிழ்நாடு அரசு அரசியல் காரணமாக தேசியக் கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. நமது குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை மலிவான அரசியல் ஒருபோதும் மறைத்து விடக்கூடாது ஆகவே அரசியல் வேறுபாடுகளை மறந்து நமது குழந்தைகள் உலகத்தரமான கல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை கொடுக்க வேண்டும்'' என்று தர்மோந்திர பிரதான் கூறியுள்ளார்.
What's Your Reaction?