எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது?... நீட் முறைகேடுகளுக்கு மத்தியில் அரசு அறிவிப்பு
இந்த ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நாடு முழுவதும் இருந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் வாரம் முதல் துவங்கவுள்ளதாகவும், நான்கு கட்டங்களாக மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என்றும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான இளநிலை நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே ஐந்தாம் தேதி நடைபெற்றது 23 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்றனர். இதற்கான முடிவுகள் கடந்த ஜூன் நான்காம் தேதி வெளியானது நிலையில், நுழைவுத் தேர்வில் வினாத்தாள் வெளியானது, ஆள்மாறாட்டம் நடைபெற்றது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன.
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நாடு முழுவதும் இருந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. தற்போது வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகின்றது. வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்படும் பட்சத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று எச்சரித்து இருந்தது. அதன் காரணமாகவே மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுகளை மத்திய, மாநில அரசுகள் நிறுத்தி வைத்திருந்தன.
நீட் தேர்வின் நம்பகத்தன்மை குறித்து உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை மத்திய அரசிடம் முன் வைத்து வருகின்றது. இருப்பினும் நடைபெற்ற முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
முறைகேட்டில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் மேலும் நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு செய்யப்பட்ட மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றது குறித்து தெரிந்தால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் உறுதியளித்துள்ளது.
எனவே வரும் ஜூலை மூன்றாம் வாரம் முதல் கலந்தாய்வை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நான்கு கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை மூன்றாம் வாரத்தில் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பரில் நடைபெறும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?