IndependenceDay: “தமிழ்நாடு இந்தியாவின் அறிவுசார் ஆன்மிக தலைநகரம்” ஆளுநர் ரவி சுதந்திர தின வாழ்த்து
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பொதுமக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஆக.15) சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நமது சுதந்திரத்தின் 78வது ஆண்டு விழாவை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான, நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் தருணத்தில், நீண்டகால அடக்குமுறை காலனித்துவ ஆட்சியில் இருந்து நமக்கு விடுதலை பெற்றுத்தந்த சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும், உயிர் நீத்தவர்களுக்கும் நெஞ்சார்ந்த அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன். நமது தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து, நமது அரசியலமைப்பு, சமூகம், அரசியலின் பன்மை, ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்க, உச்சபட்ச தியாகமாக இன்னுயிரை நீத்து வீரமரணம் அடைந்தவர்கள். எப்போதும் விழிப்புடன் உள்ள ஆயுதப் படைகள், பாதுகாப்புப் படைகளின் வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.
கடந்த ஒரு தசாப்தத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு, ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், பாரதம் விளிம்பிலிருந்து உலக விவகாரங்களின் மைய நிலைக்கு நகர்ந்துள்ளது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, வளர்ந்த நாடுகளுக்கு பொறாமையையும் வளரும் நாடுகளுக்கு உத்வேகத்தையும் அளிக்கிறது. கணக்கில் கொள்ளப்படாத நிலையில் இருந்த நமது நாடு, இன்று அறிவியல், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் உலகின் முதல் சில நாடுகளில் ஒன்றாக உள்ளது; நாம் உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்-அப் சூழல் நிறைந்த நாடாக இருக்கிறோம்; கடந்த ஒரு தசாப்தத்தில் 25 கோடிக்கும் அதிகமான வறியநிலை மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். நமது டிஜிட்டல் வசதி உள்கட்டமைப்புகள், உலகத்தரம் வாய்ந்த நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் அல்லது மேம்படுத்தப்பட்ட மின்னுற்பத்தி நிலையங்கள் என எதுவாக இருந்தாலும் அவற்றில் முன் எப்போதுமில்லாத வளர்ச்சி உள்ளது.
பழங்குடி சகோதர, சகோதரிகளுக்கு அதிகாரமளிப்பதற்கான சிறப்பு உந்துதல் கொண்ட பல்வேறு நலத்திட்டங்கள், அவர்களின் வாழ்க்கையை மாற்றி, நமது சமூகத்தில் வளர்ந்த பிரிவுகளுக்கு இணையாக அவர்களை தேசிய நீரோட்டத்தில் கொண்டு வந்துள்ளன. உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் விவசாயிகள், இன்று அதிக ஆர்வமுள்ளவர்களாகவும், நவீன தொழில்நுட்பங்களையும் நிலையான விவசாய முறைகளையும் பின்பற்றி வருகின்றனர். இயற்கை விவசாயத்தின் நிலையான விரிவாக்கம், தினை சாகுபடி, பயிர் பல்வகைப்படுத்துதல், தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொண்டு உருமாறியுள்ள நமது விவசாயத்துறை நிலையான உலகளாவிய எதிர்காலத்துக்கான வழியாகவும், உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் உள்ளது. டிஜிட்டல் பொதுத்துறை உள்கட்டமைப்பு சிறிய விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருவாய் ஆதரவை வழங்கும் பிரதமரின் கிசான் சம்மான் நிதியை அவர்களின் வங்கிக் கணக்குக்கு உடனடியாகவும் நேரடியாகவும் மாற்ற உதவுகிறது.
மக்கள் அனைவரின் நலனுக்காக நமது நாடு விரிவான புரட்சிகர மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், குடிமக்களாகிய நாம் தேசத்தின் முன்னேற்றப் பயணத்தில் நம்மால் முடிந்த பங்களிப்பை வழங்க வேண்டும். நமது மாநிலம் மிகச்சிறந்த மனித ஆற்றல்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாரதத்தின் அறிவுசார் ஆன்மிக தலைநகரமாக விளங்குகிறது. எனினும், பள்ளிகள், கோயில்கள், கிராமத் திருவிழாக்கள் போன்றவற்றில் தலித்துகளுக்கு எதிரான சமூக பாகுபாடுகள் குறித்து அடிக்கடி வரும் செய்திகள் மிகவும் வேதனைக்குரியவை மற்றும் மிகவும் வெட்கக்கேடானது. அத்தகைய சமூக பாகுபாடுகள் வெறுக்கத்தக்கவை ஏற்றுக்கொள்ள முடியாதவை. தலித்துகள் நமது சகோதர, சகோதரிகள். இந்த பாரபட்சமான நடைமுறைகளை புறந்தள்ளி, அவர்களை இரு கரங்களுடன் ஆரத்தழுவுமாறு உங்கள் அனைவருக்கும் நான் உளப்பூர்வமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.
இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் அதன் பரவலால் மிகவும் கவலை அடைந்துள்ளோம். பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகே போதைப்பொருள் எளிதில் கிடைப்பதாக கவலையளிக்கும் தகவல்கள் உள்ளன. இது மிக, மிக அபாயகரமானது. போதைப்பொருள் - குடும்பங்கள், சமூகங்கள், மாநிலங்கள், நாடுகளை அழித்துள்ளது. இளைஞர்களே நமது எதிர்காலம். போதையில் இருந்து நமது இளைஞர்களை காப்பாற்ற வேண்டும். போதைக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருப்பது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில், கள்ளச்சாராயம், விஷச்சாரயம் அருந்தியதால் விலைமதிப்பற்ற பல உயிர்களை இழந்துள்ளோம். இந்த ஆண்டு இது ஒப்பீட்டளவில் அதிக பேரழிவை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழைகள். வருவாய் ஈட்டித்தந்த உறவுகளை பல குடும்பங்கள் இழந்துள்ளன. பெண்கள் கணவன்மார்களை இழந்துள்ளனர், குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு சென்றுள்ளனர். இதற்கு காரணமான மரண வியாபாரிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடாமல் இருக்கவும் அவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்படுவதையும் காவல்துறை உறுதிப்படுத்தும். அதேவேளையில், நமது சட்ட அமலாக்க அமைப்புகளும் பொதுமக்களும் கள்ளச்சாராய விநியோகத்துக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மிகவும் மோசமாக பாதிக்கப்படும் நமது தாய்மார்கள், சகோதரிகள், போதைப்பொருள், கள்ளச்சாராயத்துக்கு எதிராக செயல்படுமாறு வலியுறுத்துகிறேன்.
சுற்றுப்புறங்களில் தூய்மை, மின்சாரத்தை வீணடிப்பதைத் தவிர்ப்பதன் மூலம் மின்னாற்றலைச் சேமிப்பது, தண்ணீரை சேமிப்பது ஆகியவை நமது அன்றாட பழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அந்த பழக்கத்தை வளர்த்துக் கொள்வதுடன், மற்றவர்களையும் ஊக்குவிக்க வேண்டும். அதேபோன்று நிலையான சுற்றுச்சூழலுக்காக மரங்களை நடுவது நமது பழக்கமாக மாற வேண்டும். இந்த சுதந்திர தினத்தை சிறப்புமிக்கதாக மாற்றும் வகையில் நமது அனைவரும் நமது அன்னையின் பெயரில் ஒரு மரத்தை நடுவோம். 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நமது வரலாற்றுபூர்வ தேசிய நோக்கத்தில் தொடர்ந்து நாம் உறுதியுடன் இருப்போம். நமது தேசிய மகிழ்ச்சித் திருவிழாவான சுதந்திர தினத்தை முழு பூரிப்புடனும் உற்சாகத்துடனும் ஒவ்வொரு வீட்டிலும் கட்டடத்திலும் மூவர்ணக் கொடியை ஏற்றிக் கொண்டாடுவோம். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?