அரசியல்

Khushbu: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ராஜினாமா.. பாஜகவில் இருந்து விலக முடிவு?

குஷ்புவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? என்பது குறித்து குஷ்பு இதுவரை ஏதும் விளக்கம் அளிக்கவில்லை.

Khushbu: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ராஜினாமா.. பாஜகவில் இருந்து விலக முடிவு?
Khushbu

சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. நடிப்பில் இருந்து விடைபெற்ற பிறகு தீவிர அரசியலில் களம் இறங்கிய குஷ்பு, திமுகவுக்கு சென்றார். அதன்பிறகு திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். பின்பு அங்கு இருந்தும் விலகி பா.ஜ.கவில் ஐக்கியமானார். பாஜகவில் அவருக்கு செயற்குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது. 

பாஜகவில் தீவிரமாக பணியாற்றி வந்த குஷ்பு கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை கடைக்கோடி தொண்டர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். மேலும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைத்து வந்த அவர் பாஜகவின் பிரதான எதிரியான திமுக மீதும், தமிழ்நாடு அரசு மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். 

இதுதவிர தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் விருப்ப பட்டியலிலும் குஷ்பு முன்னணியில் இருந்தார். இப்படி பாஜகவில் பம்பரமாக சுழன்று வந்த குஷ்புக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி தேடி வந்தது. அதாவது கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக கடந்த ஜூலை மாத இறுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு அவர் ராஜினாமா கடிதம் அனுப்பி இருந்தார்.

தற்போது குஷ்புவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? என்பது தெரியவில்லை. பதவியை ராஜினாமா செய்தது குறித்து குஷ்பு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. 

குஷ்பு அண்மை காலமாக பாஜகவின் நிகழ்ச்சிகளில் பெரிதாக தலை காட்டாமல் ஒதுங்கி இருந்து வந்தார். மக்களைவைத் தேர்தலுக்கு முன்னதாக, எலும்பில் முறிவு அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக கூறி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்யவில்லை.

இதனால் குஷ்பு பாஜக மீது விரக்தியில் உள்ளதாகவும், பாஜகவில் இருந்து விலக உள்ளதாகவும் அப்போதே தகவல்கள் பரவின. தற்போது  தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், குஷ்பு விரைவில் பாஜகவில் இருந்து விலக உள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

நடிகரும், தவெக தலைவருமான விஜய், விரைவில் தனது கட்சியின் பெயர், சின்னத்தை பிரம்மாண்ட மாநாடு மூலம் அறிவிக்க உள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் குஷ்பு, விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.