10 Flights Cancelled in Chennai Airport : சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில், போதிய பயணிகள் இல்லாமலும், நிர்வாக காரணங்களாலும், ஐந்து வருகை விமானங்கள், ஐந்து புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து இன்று காலை 7.45 மணிக்கு அந்தமான் செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 11.20 மணிக்கு இலங்கை செல்லும் ஏர் இந்தியா விமானம், பகல் 1.20 மணிக்கு, பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா விமானம், பகல் 1.40 மணிக்கு பெங்களூரு செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், மாலை 3.25 மணிக்கு, மும்பை செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஆகிய 5 புறப்பாடு விமானங்கள் இன்று (அக். 4) ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் இன்று காலை 7.05 மணிக்கு, சென்னைக்கு பெங்களூரில் இருந்து வரும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12.05 மணிக்கு, மும்பையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம், பகல் ஒரு மணிக்கு, அந்தமானில் இருந்து வரும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், பிற்பகல் 2.45 மணிக்கு, மதுரையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம், மாலை 3.40 மணிக்கு, இலங்கையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம், ஆகிய 4 வருகை விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம்... உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக மீனவர் சங்கம்!
இது பற்றி சென்னை விமான நிலைய(Chennai Airport) அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “சென்னை விமான நிலையத்தில், போதிய பயணிகள் இல்லாமலும் விமான நிறுவனங்களின் நிர்வாக காரணங்கள் காரணமாகவும், இன்று வருகை விமானங்கள் 5, புறப்பாடு விமானங்கள் ஐந்து, மொத்தம் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் விமான டிக்கெட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளதால், விமானங்கள் ரத்து காரணமாக, பயணிகளுக்கு பெரிய அளவில் சிரமங்கள் எதுவும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கின்றனர்.