சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வலம் வரும் தளபதி விஜய், விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். தற்போது கோட் படத்தில் நடித்து வரும் விஜய், சில தினங்களுக்கு முன்னர் தனது கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என அறிவித்திருந்தார். அதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்கள் சேர்க்கும் வேலைகளை கட்சியின் நிர்வாகிகள் தீவிரப்படுத்தினர். அதேபோல், சில தினங்களுக்கு முன்னர் தவெக சார்பில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவும் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றிருந்தனர்.
இதனிடையே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தின் போது, விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். அதேபோல், கல்வி விருது வழங்கும் விழாவிலும் நீட் தேர்வு குறித்து பேசி கவனம் ஈர்த்திருந்தார். இவைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், விஜய் பெரும்பாலும் அறிக்கை மட்டுமே வெளியிட்டு வருகிறார். தலைவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து அல்லது ஏதேனும் பண்டிகைகள் வரும் போது பொதுமக்களுக்கு வாழ்த்து கூறுவது, மேலும் வயநாடு போன்ற பேரிடர் காலங்களில் இரங்கல் தெரிவிப்பதற்காக மட்டுமே அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
இதுகுறித்து ஏற்கனவே பலரும் விஜய்யை விமர்சித்திருந்தனர். வாழ்த்து சொல்வதும் இரங்கல் தெரிவிப்பதும் மட்டும் தான் விஜய்க்கு தெரிந்த அரசியலா..? முக்கியமான பிரச்சினைகளுக்கு எதிராக விஜய் எப்போது பேசுவார், அவரது அரசியல் சித்தாந்தம், கொள்கை ஆகியவை தான் என்ன என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தவெக தலைவர் விஜய்க்கு அட்வைஸ் செய்துள்ளதோடு, கேள்விகளையும் முன் வைத்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், “நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிவிட்டாலும் மத்திய பட்ஜெட், ஹிண்டர்பர்க் அறிக்கை உள்ளிட்ட பிரச்சினைகளில் அவருடையை கருத்து, நிலைபாடு என்னவென்பதை தெளிவுப்படுத்த வேண்டும்” என அட்வைஸ் செய்துள்ளார்.
மேலும் படிக்க - விக்ரமின் தங்கலான் ரிலீஸுக்கு தடையில்லை
மேலும், “கட்சித் தலைவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதும், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விழாக்களுக்கு வழ்த்துக் கூறுவதும் பெரிதல்ல” எனக் கூறியுள்ளார். இதனால் உக்கிரமான விஜய் ரசிகர்களும், தவெக தோழர்களும் கார்த்தி சிதம்பரத்தை கலாய்த்து வருகின்றனர். “எங்கள் தலைவருக்கு எப்போது அரசியல் பேச வேண்டும் எனத் தெரியும்... பேச வேண்டிய நேரத்தில் சரியாக பாய்ண்ட் பிடித்து பேசுவார்” என்றெல்லாம் வக்காளத்து வாங்கி வருகின்றனர். அதேநேரம் கார்த்தி சிதம்பரத்தின் கேள்விகள் நியாயமானது தான் என அவருக்கு சிலர் ஆதரவும் கொடுத்து வருகின்றனர். செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக சொல்லப்படும் தவெக முதல் மாநாட்டில் விஜய் கண்டிப்பாக அரசியல் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, திருச்சியில் நடைபெறும் என சொல்லப்பட்டது. ஆனால், அது தற்போது விக்கிரவாண்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும். அங்குள்ள சூர்யா கல்லூரி அருகே செப்டம்பர் 22ம் தேதி நடைபெறலாம் எனவும் சொல்லப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் பேசுங்க விஜய் - கார்த்திக் சிதம்பரம் #kumudamnews | #kumudamnews24x7 | #kumudam | #Pudukottai | #Vijay | #TVKparty | #TVKVijay | #Karthichidambaram | #Congress | @KartiPC | @actorvijay | @tvkvijayhq pic.twitter.com/1W1aygypI7
— KumudamNews (@kumudamNews24x7) August 14, 2024