Thangalaan Movie Release : விக்ரமின் தங்கலான் ரிலீஸுக்கு தடையில்லை... கடைசி நேரத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
Madras High Court on Thangalaan Movie Release : சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Madras High Court on Thangalaan Movie Release : பொன்னியின் செல்வனுக்குப் பின்னர் சீயான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தங்கலான். பா ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். விக்ரமுடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள தங்கலான் நாளை வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. இதில், சீயான் விக்ரம், பா ரஞ்சித், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
இதனிடையே, தங்கலான் படத்தை ரிலீஸ்(Thangalaan Release Issue) செய்யும் முன்னர் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதாவது, அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்களான ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோருக்கு 10.35 கோடி ரூபாய் கடன் கொடுத்திருந்தார். கடந்த 2013ம் ஆண்டு வாங்கிய இந்த கடன் தொகையை, ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை. இதனால் இந்த கடன் தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்தக் கோரி சொத்தாட்சியர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் இதுவரை ஞானவேல்ராஜாவும் ஈஸ்வரனும் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோரை திவாலானவர்களாக அறிவிக்கக் கோரி சொத்தாட்சியர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 10 கோடியே 35 லட்சம் கடன் தொகைக்கு, 2013ம் ஆண்டு முதல் 18 சதவீத வட்டி, வழக்கறிஞர் கட்டணம் ஆகியவை சேர்த்து, 26.34 கோடி திருப்பித் தர வேண்டும். இந்த தொகையை வழங்காததால் அவர்களை திவாலானவர்கள் என அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தங்கலான் படத்தை(Thangalaan Movie) தயாரித்துள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் ரூ.1 கோடியை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும், அதன்பிறகு அந்தப் படத்தை வெளியிடலாம் என உத்தரவிட்டிருந்தனர்.
மேலும் படிக்க - விஜய்யின் கோட் படத்துக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!
அதேபோல, ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள கங்குவா படத்தை வெளியிடும் முன்பும், 1 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும் என்றும் ஞானவேல்ராஜா உள்ளிட்டோருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஒரு கோடி ரூபாய் சொத்தாட்சியர் கணக்கில் செலுத்தப்பட்டதாக ஞானவேல்ராஜா மனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து தங்கலான் படத்தை வெளியிட தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் 10 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாத விவகாரம் தொடர்பான வழக்கு ஆக 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்கலான் திரைப்படம் மொத்தம் 2,500 ஸ்க்ரீன்களில் வெளியாகின்றன. அதனையடுத்து அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள டிமான்டி காலனி 2ம் பாகம் 600 ஸ்க்ரீன்களிலும், கீர்த்தி சுரேஷ் லீடிங் ரோலில் நடித்துள்ள ரகு தாத்தா 500 ஸ்க்ரீன்களில் வெளியாகவுள்ளன. தங்கலான் படத்துக்கான ரிலீஸ் பிரச்சினை முடிவுக்கு வந்ததால், சீயான் விக்ரம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
தங்கலான் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை#kumudam | #Kumudamnews | #KumudamNews24x7 #thangalaan #ChennaiHighCourt #gnanavelraja #thangalaanmovie #order #thangalaanAug15 pic.twitter.com/7kDfF3W3a9 — KumudamNews (@kumudamNews24x7) August 14, 2024
What's Your Reaction?