TVKVijay: “பேருக்கு தான் பெரியார் கட்அவுட்... பாஜக B டீம் தான் தவெக” வெளுத்தது சாயம்... இதோ ஆதாரம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு தந்தை பெரியாரின் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதனால் விஜய்யின் அரசியல் கொள்கை பற்றி பெரிய விவாதமே எழுந்த நிலையில், தற்போது தவெக, பாஜகவின் பீ டீம் தான் என நெட்டிசன்கள் ஆதாரத்துடன் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Oct 26, 2024 - 19:16
 0
TVKVijay: “பேருக்கு தான் பெரியார் கட்அவுட்... பாஜக B டீம் தான் தவெக” வெளுத்தது சாயம்... இதோ ஆதாரம்!
தவெக பாஜகவின் பி டீம் - நெட்டிசன்கள் விமர்சனம்

சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக வலம் வரும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். விஜய் 2026 தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், தவெக கொள்கை விளக்க மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை நடைபெறுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தவெக மாநாட்டுத் திடலில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கட்-அவுட் நடுவே, விஜய்க்கும் 70 அடி உயரத்தில் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை விஜய் முன்னிலைப்படுத்தியது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், வீரமங்கை வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், சேர, சோழ, பாண்டியர் ஆகியோரது கட்-அவுட்டும் வைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழண்ணையின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதுவே விஜய்க்கும் அவரது தமிழக வெற்றிக் கழகத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இதில், பாஜக வெளியிட்ட தமிழ்த்தாய் புகைப்படம் கட்-அவுட்டாக வைக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஒரு தமிழணங்கு ஓவியத்தை வெளியிட்டார். அதற்குப் போட்டியாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தமிழ்த்தாய் புகைப்படத்தை பதிவிட்டார். 

இப்போது விஜய்யின் தவெக மாநாட்டுத் திடலில், அண்ணாமலை வெளியிட்ட தமிழ்த்தாயின் புகைப்படம் போல் தமிழண்ணைக்கு கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்களும் களத்தில் இறங்கி சம்பவம் செய்து வருகின்றனர். விஜய் அரசியலில் களமிறங்குவதாக அறிவித்த நாள் முதல், அவர் பாஜகவின் பி டீம் என விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமில்லாமல் தேசிய குடியுரிமை சட்டம், நீட் தேர்வு விவகாரங்களில் பாஜகவை விஜய் நேரிடையாக விமர்சிக்கவே இல்லை. இதுவும் அவர் மீது பாஜகவின் நிழல் என்ற முத்திரை விழ காரணமாக அமைந்தது.

ஆனால், தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் விஜய் நேரில் சென்று மரியாதை செலுத்தியிருந்தார். இதனால் விஜய்யும் பெரியாரின் கொள்கையை முன்னிறுத்தி அரசியல் செய்வார் என எதிர்பார்ப்பு எழுந்தது. விஜய்யின் இந்த நடவடிக்கையை தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்று இருந்தனர். இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட தமிழ்த்தாய் புகைப்படத்தை, மாநாட்டுத் திடலில் கட்-அவுட்டாக வைத்துள்ளது, தமிழக வெற்றிக் கழகம் பாஜகவின் பி டீம் தான் என விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே தவெகவின் கொள்கை, சித்தாந்தம், அக்கட்சியின் கொடி ஆகியவை குறித்து விஜய் நாளை என்ன விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதோடு பாஜகவின் தமிழ்த்தாய் புகைப்படம் கட்-அவுட்டாக வைக்கப்பட்டதற்கும் விஜய் விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow