TN Police Encounter List : சீவலப்பேரி பாண்டி.. சுட்டுத் தள்ளிய தமிழக போலீஸ்..40 ஆண்டுகளில் தோட்டாக்களுக்கு இரையானோர் லிஸ்ட்

Tamil Nadu Police Encounter List : தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தற்போது காக்கா தோப்பு பாலாஜி வரை சுமார் 15 என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.1984ஆம் ஆண்டு சீவலப்பேரி பாண்டி முதல் தற்போதய காக்காத் தோப்பு பாலாஜி வரை என்கவுன்டர் செய்யப்பட்டவர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

Sep 18, 2024 - 13:15
Sep 18, 2024 - 15:12
 0
TN Police Encounter List : சீவலப்பேரி பாண்டி.. சுட்டுத் தள்ளிய தமிழக போலீஸ்..40 ஆண்டுகளில் தோட்டாக்களுக்கு இரையானோர்  லிஸ்ட்
tamil nadu police encounters list 2024

Tamil Nadu Police Encounter List : காவல்துறையினர் தங்கள் பணியை மேற்கொள்ளும்போது, எதிர்பாராதவிதமாக, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ளும் பதிலடித் தாக்குதல்தான் என்கவுன்டர்.கடந்த 40 ஆண்டுகளில் இதுவரை நடைபெற்றுள்ள என்கவுன்டர்களை பார்க்கலாம். 

தமிழகத்தில் என்கவுன்டர் என்பது 1970 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கியது. தமிழக காவல்துறையில்(Tamil Nadu Police) உயர் அதிகாரியாக இருந்த தேவாரம் அந்தக் காலகட்டத்தில் அதிகமாக ஊடுருவியிருந்த நக்சலைட்களை ஒழிப்பதற்காக நடவடிக்கையை மேற்கொண்டார் பின்னர் படிப்படியாக அதிகரித்துவந்த ரவுடியிசத்தை ஒழிக்க, என்கவுன்டர்கள் நடத்தப்படுகின்றன.

1984ஆம் ஆண்டு சீவலப்பேரி பாண்டி(Seevalaperi Pandi) மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இது திரைப்படமாக வெளியாகி பெறும் வெற்றி பெற்றது. 

கடந்த 1996ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி, லயோலா கல்லூரி அருகே நடந்த மோதலில் பிரபல ரவுடி ஆசைத்தம்பி(Rowdy Asai Thambi), அவரின் கூட்டாளிகளான குணா, மனோ ஆகியோர் போலீஸாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகினர். அதே ஆண்டு 'ஜிம் பாடி' கபிலன் என்கிற தாதா அடையாறு அருகே நடந்த மோதலின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

2002ஆம் ஆண்டு இமாம் அலி உட்பட ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2003ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி, தூத்துக்குடி வெங்கடேச பண்ணையார் சென்னையில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பல்வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்த அயோத்திக்குப்பம் வீரமணி, அதே ஆண்டில் என்கவுன்டர் செய்யப்பட்டார்.

கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் சந்தனக்கடத்தல் வீரப்பன் மற்றும் அவரின் கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா, சேது மணி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் 12, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 'பங்க்' குமார் (எ) கொத்தவால் சாவடி குமார், திருநீர்மலை பகுதியில் போலீஸாருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2007ஆம் ஆண்டு ஆகஸ்டு  மாதம் வெள்ளை ரவி மற்றும் அவரின் கூட்டாளி குணா, ஓசூர் அருகே சுட்டுக் கொல்லப்பட்டனர். 

2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 வழக்குகளில் சம்பந்தப்பட்ட பாபா சுரேஷ், காசிமேடு பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2010ஆம் ஆண்டு பிப்ரவரி 16, பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட திண்டுக்கல் பாண்டி மற்றும் கூடுவாஞ்சேரி வேலி இருவரும் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே ஆண்டில் சாத்தூர் - கோவில்பட்டி சாலை பகுதியில் பதுங்கியிருந்த சாத்தூர் குமாரை போலீஸார் சுட்டுக்கொன்றனர்.  நவம்பர் மாதம் கோவையில் 10 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலைசெய்த வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் மோகன் ராஜ், என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

2012ஆம் ஆண்டு சிவகங்கை காவலர் சால்பின் சுதனைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான பிரபு, பாரதி இருவரும் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

2012ஆம் ஆண்டு பிப்ரவரி, பல்வேறு வங்கிக் கொள்ளைகளில் சம்பந்தப்பட்ட, பீகாரைச் சேர்ந்த ஐந்து பேரை, சென்னை வேளச்சேரியில் போலீஸார் என்கவுன்டரில் கொன்றனர். 

2018-ம் ஆண்டு மார்ச் 1, மதுரையைச் சேர்ந்த ரவுடிகள் முத்து இருளாண்டி, சகுனி கார்த்தி ஆகியோர் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதே ஆண்டு, ஜூலை மாதம் ராயப்பேட்டை ரவுடி ஆனந்தன், தரமணியில் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

2019ஆம் ஆண்டு மே 2, சேலம் காரிப்பட்டி பகுதியில் கதிர்வேல் என்ற ரவுடி போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சென்னை மாதவரம் பகுதியில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுன்டரில் கொல்லப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி, விழுப்புரத்தைச் சேர்ந்த ரவுடி மணிகண்டன் கொரட்டூரில் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2020 ஆம் ஆண்டு ஒரே ஒரு என்கவுண்டர் சம்பவம் நடைபெற்றது. சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான சங்கரை போலீசார் சுட்டுக் கொண்டனர். போலீசார் திட்டமிட்டு சங்கரைக் கொன்றதாக அவரது உறவினர்கள் புகார் கூறியது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 ஆம் ஆண்டு கடலூரை சேர்ந்த கிருஷ்ணன், காஞ்சிபுரத்தைச் சேர்ர்ந்த முர்தசா ஆகியோர் காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகினர்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் செங்கல்பட்டைச் சேர்ந்த சேர்ந்த தினேஷ், மொய்தீன் மற்றும் நெல்லையில் நீராவி முருகன் ஆகியோர்  என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டனர்.

கடந்த  2023 ஆண்டு மட்டும் 3 என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்றது, சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த சோட்டா வினோத், ரமேஷ், திருச்சியைச் சேர்ந்த பில்லா ஜெகன் ஆகியோர் காவல் துறையின் துப்பாக்கி தோட்டாக்களுக்கு இரையாகினர்.

இந்த ஆண்டு (2024)  திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடியான துரைசாமி புதுக்கோட்டையில் என்கவுண்டர் செய்யப்பட்டார். தொடர்ந்து சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடமும், தற்போது காக்கா தோப்பு பாலாஜியும் என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow