ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரியில் தொடரும் கனமழை... அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

Tamil Nadu Weather Update : தமிழ்நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட அதன் சுற்றுப்புற பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதேநேரம் நீலகிரியில் பெய்து வரும் தொடர் கனமழையால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Jul 19, 2024 - 14:09
Jul 20, 2024 - 15:50
 0
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரியில் தொடரும் கனமழை... அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு
தமிழ்நாடு மழை நிலவரம்

Tamil Nadu Weather Update : சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கவலையில் இருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் இரவு நேரங்களில் மட்டுமே மழை பெய்து வந்தது. ஆனால், கடந்த மூன்று தினங்களாக 24 மணி நேரமும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் சென்னை உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் காணப்படுகிறது. இந்நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, 2 முதல் 3 நாட்களில் வலுப்பெற்று ஒடிசாவில் கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

இந்நிலையில், சென்னையில் பருவமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டால், அதனை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்தும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் 4, 5ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி சுற்றுலாவை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். மேலும், மாம்பலம் கால்வாய் மட்டுமல்ல, பிற கால்வாய் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பணிகள் விரைந்து முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார். அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நகரின் ஏதாவது ஒரு பகுதியில் கொசு மருந்து தெளிக்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். 

இதனிடையே தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 21 புள்ளி 6 சென்டிமீட்டர் மழை பதிவுவாகியுள்ளது. 

அதேபோல், கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியின் மாஹேவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியை கடந்துள்ளது.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து 8,160 கன அடியாக உள்ளது. இதையடுத்து 14,160 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு 15,717 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 70 அடியாக இருந்த நிலையில், தற்போது 80.13 அடியாக உயர்ந்துள்ளது. பவானி ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டுப்பாளையம் ஆலங்கொம்பு, சிறுமுகை, லிங்காபுரம் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து விநாடிக்கு 310 கனஅடியாக காணப்படுகிறது. அதேபோல் பில்லூர் அணையின் நீர்வரத்தும் விநாடிக்கு 8,160 கனஅடியாக அதிகரித்துள்ளது. கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசரகால நீர் வெளியேற்றும் வழியாக ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow