சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 4 சட்டத்திருத்த மசோதாக்கள் என்னென்ன..? ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!
Tamil Nadu Governor RN Ravi : சென்னை காவல் சட்டத்தை மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யும் மசோதா உள்பட 4 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
Tamil Nadu Governor RN Ravi : சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு தமிழ்நாஅடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில்(TN Assembly Session 2024), பல்வேறு புதிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, சென்னையில் கழிவு நீர் இணைப்பை கட்டாயமாக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தவும் அவர் ஒப்பதும் வழங்கியுள்ளார்.
மேலும், புதிய மாநகராட்சிகளை உருவாக்க, வருவாய், மக்கள் தொகை வரம்புகள் குறைத்தல் மசோதாவிற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சென்னை காவல் சட்டத்தை மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு விரிவாக்கம் செய்வதற்காகவும் மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கும் தமிழ்நாடு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து சட்டத்திருத்தங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு அமலாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து இந்த மசோதாக்களை நடைமுறைப்படுத்தும் பணிகளில் தமிழ்நாடு அரசு ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைகளை சீரமைப்பதற்கான டெண்டரை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், திரு.வி.க நகர் மண்டலத்தில் 77 சாலைகள், அம்பத்தூர் மண்டலத்தில் 53 சாலைகள், அண்ணா நகர் மண்டலத்தில் 76 சாலைகள் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 7ம் தேதி சாலை சீரமைக்கும் பணிக்கான டெண்டரை விருப்பமுள்ள நிறுவனங்கள் கோரலாம் என சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.
மேலும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 60 சாலைகள், கோடம்பாக்கம் மண்டலத்தில் 52 சாலைகள், வளசரவாக்கம் மண்டலத்தில் 112 சாலைகள், ஆலந்தூர் மண்டலத்தில் 83 சாலைகள் ஆகியவையும் டெண்டரில் இடம்பெற்றுள்ளன. அதேபோல், அடையார் மண்டலத்தில் 54 சாலைகள், பெருங்குடி மண்டலத்தில் 51 சாலைகள், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 63 சாலைகள், திருவொற்றியூர் மண்டலத்தில் 106 சாலைகள், மணலி மண்டலத்தில் 26 சாலைகள், மாதவரம் மண்டலத்தில் 89 சாலைகள், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 81 சாலைகள், ராயபுரம் மண்டலத்தில் 69 சாலைகள் ஆகியவையும் டெண்டரில் இடம்பெற்றுள்ளன.
What's Your Reaction?