UP Train Accident: உத்தரபிரதேசம் ரயில் விபத்து... தொடரும் மீட்பு பணி... 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

Uttar Pradesh Train Accident : உத்தரபிரதேசம் ரயில் விபத்தில் உயிரிழந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் நிவாரண தொகை குறித்து ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

Jul 19, 2024 - 14:42
Jul 20, 2024 - 15:50
 0
UP Train Accident: உத்தரபிரதேசம் ரயில் விபத்து... தொடரும் மீட்பு பணி... 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
Uttar Pradesh Train Accident

Uttar Pradesh Train Accident : பஞ்சாப்பின் சண்டிகரில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகருக்கு விரைவு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. உத்தரப்பிரதேசத்தின் கோண்டா அருகேயுள்ள பிகவ்ரா பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அந்த ரயிலின் 12 பெட்டிகள் எதிர்பாராத விதமாக தடம்புரண்டன. இதனால் அடுத்தடுத்து அட்டைப்பெட்டி போல் ரயில்பெட்டிகள் சரிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோல், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா இரண்டரை லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், விபத்து தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையம், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயில் விபத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ரயில் பாதுகாப்பை மத்திய அரசு சீர்குலைத்துள்ளது என்பதற்கு இது மற்றொரு உதாரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளார். ரயில்வே நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும், விபத்துகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் இந்த விபத்து காரணமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கோண்டா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், விரைவு ரயில் தடம் புரண்ட சம்பவத்தில், ரயில்வே அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்திய அரசு என்ன செய்கிறது என கேள்வி எழுப்பியுள்ள அவர், பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் எனவும், அரசுக்கு எப்போது மக்கள் மீது அக்கறை வரும் எனவும் அவர் அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைத்துள்ளார். 

இதனிடையே உத்தரப்பிரதேசத்தில் ரயில் தடம்புரண்ட விபத்துக்குள்ளான பகுதியில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இன்னும் சில மணி நேரங்களில் ரயில் சேவை மீண்டும் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு ஜூன் 2ம் தேதி ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர், 1175 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/GcptDVez2DI?si=FYG_wFYjItQJkGky

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow