செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?..புழல் சிறையில் இருந்து எப்போது விடுதலையாவார்?

அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கினாலும் செந்தில் பாலாஜி வெளியே வருவதில் சிக்கல் நீடிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Aug 20, 2024 - 13:49
 0
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?..புழல் சிறையில் இருந்து எப்போது விடுதலையாவார்?
senthil balaji supreme court bail case

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைப்பதி கிடைத்தாலும், விடுதலையாவதில் சில சிக்கல் உள்ளது என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதாவது, கடந்த 2011 - 2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1 கோடியே 62 லட்சம் மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் ஆகியோர் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் ஆகிய நால்வர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

காவல்துறை வழக்குப்பதிவு செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டதால் வழக்கை முடித்தது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "சமரசம் என்பது பணம் கொடுக்கல் வாங்கல் நடந்திருப்பதை உறுதி செய்கிறது. தவறு செய்யாத யாரும் யாருடனும் சமரசம் செய்ய அவசியம் இல்லை. அதனால், மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்" என உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவையடுத்து வருமானவரித் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை செய்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். ஆவணங்களின் அடிப்படையில், சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக உறுதி செய்து, 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட போது ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செந்தில் பாலாஜி, சிகிச்சைக்கு பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜின் ஜாமீன் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரது சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக இருப்பதால் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. மேலும், மருத்துவ காரணங்களுக்காகவும் ஜாமின் வழங்க முடியாது என மறுத்து விட்டது.

பின்னர், மீண்டும் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி வழக்கின் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதால் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்தது. மேலும், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கை 3 மாதத்தில் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவின் படி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்குவதற்கு முன், அமலாக்கத்துறை ஆவணங்களை தனக்கு வழங்கும் வரை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும். மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. கரூர் சிட்டி யூனியன் வங்கியில் உள்ள கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும்.தனக்கு எதிராக போலியாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க வேண்டும். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்தால், தற்போது அமர்வு நீதிமன்றம் நடத்தும் விசாரணை தேவையற்றது. அதனால் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என சுமார் 18 வழக்குகள் செந்தில் பாலாஜி தரப்பில் தொடரப்பட்டது ஆனால் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதில் கடந்த முறை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், செந்தில் பாலாஜி பல மாதங்களாக சிறையில் இருந்து வருவதால் அவரது வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தார். மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், தனக்கு வழக்கில் இருந்து ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு மனுவை கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் ஆஜராக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வரத் தாமதமாகும் எனக்கூறி வழக்கை இன்றைய நாள் இறுதியில் தள்ளிவைக்கக் கோரி அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள்; இந்த வழக்கில் ஒன்றிய அரசுக்கு இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது.

சொலிசிட்டர் ஜெனரல் வரத் தாமதமாகும் எனக்கூறி வழக்கை இன்றைய நாள் இறுதியில் தள்ளிவைக்க மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இன்று இறுதி நாள், இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது என்று கூறி இன்று கடைசி வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதி ஓகா தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கினாலும், போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாக பணம் வாங்கியதாக எம்.பி, எம்.எல். ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுதலையாக முடியாது.

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக தொடரப்பட்ட வழக்கில், பணப் பரிமாற்றம் நடைபெற்றதற்காக மட்டும் அமலாக்கத்துறை விசாரணை செய்வதால், ஜூன் 14, 2023 முதல் கிட்டத்தட்ட 400 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி வெளியே வர முடியாது என சட்ட நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow