'வங்கதேசத்துடன் கிரிக்கெட் விளையாடக்கூடாது'.. திடீரென போர்க்கொடி தூக்கும் இந்தியர்கள்.. என்ன காரணம்?

வங்கதேசத்தில் வன்முறை ஓய்ந்து இயல்புநிலை திரும்பினாலும், 'மழை விட்டாலும் தூவானம் விடவில்லை' என்பதுபோல் அங்கு சிறு சிறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வங்கதேசத்தில் 15 வயது சிறுவன் மர்ம கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டான்.

Sep 8, 2024 - 20:05
Sep 9, 2024 - 10:55
 0
'வங்கதேசத்துடன் கிரிக்கெட் விளையாடக்கூடாது'.. திடீரென போர்க்கொடி தூக்கும் இந்தியர்கள்.. என்ன காரணம்?
Indian And Bangladesh Team

டெல்லி: நமது அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த மாதம் மிகப்பெரும் வன்முறை வெடித்தது. அங்கு சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு ஆளும் கட்சியான அவாமி லீக் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி பயங்கரமாக மோதிக் கொண்டனர். இந்த மோதல் நாடு முழுவதும் பரவி பெரும் வன்முறையாக உருவெடுத்தது. வன்முறையில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். வங்கதேசத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், ஆளும் கட்சிக்கு சொந்தமான கட்டடங்கள் ஹோட்டல்கள் ஆகியவற்றுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். 

பின்னர் இது இந்துக்களுக்கு எதிரான வன்முறையாக மாறியது. வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் கோயில், காளி கோயில் உள்பட பல்வேறு இந்து கோயில்களுக்கு தீ வைக்கப்பட்டன. சில இடங்களில் இந்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்றார். இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். 

அதன்பிறகு வங்கதேசத்தில் வன்முறை ஓய்ந்து இயல்புநிலை திரும்பினாலும், 'மழை விட்டாலும் தூவானம் விடவில்லை' என்பதுபோல் அங்கு சிறு சிறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வங்கதேசத்தில் 15 வயது இந்து சிறுவன் மர்ம கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது வங்கதேசத்தின் குல்னா நகரத்தில் வசித்து வந்த இந்து மதத்தை சேர்ந்த உத்சவ் மண்டோல் என்ற சிறுவன், முகமது நபி குறித்து சமூகவலைத்தளத்தில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுவன் கைது செய்யப்பட்டான். அவனை குல்னா நகர போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு புகுந்த மர்ம கும்பல் ஒன்று சிறுவனை பயங்கர ஆயுதங்களால் அடித்துக் கொன்றது. போலீஸ் நிலையத்தில் காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் இருந்தபோதும் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு இந்திய நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ''அந்த சிறுவன் முகமது நபியை அவமதிப்பு செய்திருந்தால் அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அடித்துக் கொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி தொடங்குகிறது. வங்கதேசத்தில் இந்து சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டதாலும், இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் நடந்து வருவதை கண்டித்தும் வங்கதேச அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடக்கூடாது; புறக்கணிக்க வேண்டும் என்று பலரும் கூறுகின்றனர்.

இது தொடர்பாக #NoCricketWithBangladesh என்ற ஹேஸ்டேக் 'எக்ஸ்' தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஹேஸ்டேக் கீழே 'வங்கதேசத்துடன் இந்தியா கிரிக்கெட் விளையாடக்கூடாது' என நெட்டிசன்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow