விளையாட்டு

தோனியின் சாதனையை சமன் செய்த விக்கெட் கீப்பர்.. துலீப் டிராபியில் அபாரம்

துலீப் டிராபி போட்டியின் ஒரு இன்னிங்ஸில், அதிக கேட்சுகள் பிடித்த தோனியின் சாதனையை இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் சமன் செய்துள்ளார்.

தோனியின் சாதனையை சமன் செய்த விக்கெட் கீப்பர்.. துலீப் டிராபியில் அபாரம்
தோனியின் சாதனையை சமன் செய்த விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல்

துலீப் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா ‘ஏ’ மற்றும் இந்தியா ‘பி’ அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ பந்துவீச்சை தேர்வுசெய்தது.

இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்தியா ‘பி’ அணி, தனது முதல் இன்னிங்ஸில் 321 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில், மூஷீர் கான் 181 ரன்கள் எடுத்ததன் மூலம், துலீப் டிராபியில், அறிமுகப் போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினின் சாதனையை முறியடித்தார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர் தனது அறிமுகப் போட்டியில், 159 ரன்கள் எடுத்திருந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ‘ஏ’ அணியில், மயங்க் அகர்வால், சுப்மன் கில், ரியான் பராக், கே.எல்.ராகுல், ஷிவம் துபே ஆகியோர் இருந்துமே 231 ரன்களுக்குள் சுருண்டது. ஒருவர் கூட அரைசதத்தை தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகப்பட்சமாக, கே.எல்.ராகுல் 37 ரன்கள் எடுத்தார். இந்தியா ‘பி’ தரப்பில் முகேஷ் குமார் மற்றும் நவ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 90 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா ‘பி’ அணி 184 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ரிஷப் பண்ட் 61 ரன்களும், சர்ஃப்ராஸ் கான் 46 ரன்களும் எடுத்தனர். இந்தியா ‘ஏ’ அணியின் பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப், 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். கலீல் அஹமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதே சமயம் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் 7 கேட்சுகளை பிடித்தார். இதன் மூலம், துலீப் டிராபியின் ஒரு இன்னிங்ஸில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர்கள் பட்டியலில், மகேந்திர சிங் தோனியின் சாதனையை சமன் செய்தார். முன்னதாக, தோனி 2004-2005ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ‘இந்தியா கிழக்கு’ அணிக்கு எதிரான போட்டியில் 7 கேட்சுகள் பிடித்திருந்தார். அந்த சாதனையை சமன் செய்தார்.

துலீப் டிராபியில் ஒரு இன்னிங்ஸில் அதிக கேட்ச் பிடித்தவர்கள்:

மகேந்திர சிங் தோனி - 7 கேட்சுகள் : East Zone vs Central Zone - 2004-05

துருவ் ஜூரல் - 7 கேட்சுகள் : India A vs India B - 2024-25

சுனில் பெஞ்சமின் - 6 கேட்சுகள் : Central Zones vs North Zone - 1973-74

சதானந்த் விஸ்வநாத் - 6 கேட்சுகள் : South Zone vs Central Zone - 1980-81

இதனையடுத்து, 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ‘ஏ’ அணி வீரர்கள், முதல் இன்னிங்ஸை போலவே, இரண்டாவது இன்னிங்ஸிலும் படுமோசமாக ஆடினர். அதிகப்பட்சமாக கே.எல்.ராகுல் 57 ரன்களும், ஆகாஷ் தீப் 43 ரன்களும் எடுத்தனர். இதனால், 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் வித்தியாசத்தில், இந்தியா ‘ஏ’ அணி தோல்வியை தழுவியது.