மதுரை கப்பலூர் டோல்கேட்டை அகற்றும் வரை ஓயமாட்டோம்.. கொந்தளித்த ஆர்.பி. உதயகுமார் கைது

மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட திருமங்கலம் சட்டசபை தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான ஆர்.பி உதயகுமார் கைது செய்யப்பட்டார்.

Jul 10, 2024 - 10:48
Jul 10, 2024 - 11:52
 0
மதுரை கப்பலூர் டோல்கேட்டை அகற்றும் வரை ஓயமாட்டோம்.. கொந்தளித்த ஆர்.பி. உதயகுமார் கைது
RB Udayakumar Protest


திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி  திருமங்கலம் நகர் பகுதிக்கு அருகில் இருப்பதால் நகர் பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்கும், கப்பலூர் வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.திருமங்கலத்தில் டோல்கேட் பிரச்னை தொடர்பாக சட்டசபை எதிர்க்கட்சித் துணைதலைவர் ஆர்.பி உதயகுமாரிடம் பல்வேறு அமைப்பு சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். இதனையடுத்து இன்று எம்எல்ஏ ஆர்.பி உதயகுமார் தலைமையில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர். 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள மத்திய அரசின் சுங்கச்சாவடி கடந்த 2011ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இச்சுங்கச் சாவடி, நகராட்சி பகுதியில் இருந்து ஐந்து கிலோ மீட்டருக்கு தொலைவில் அமைக்க வேண்டும் என்பது விதிமுறை, ஆனால் விதிமுறை மீறி இரண்டு கிலோமீட்டர் தொலைவிலேயே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

இந்தச் சூழலில் கட்டணம் வசூலிப்பதிலும் சுங்கச்சாவடி நிர்வாகம் அடிக்கடி உள்ளூர் மக்களிடம் பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் மறியல், உண்ணாவிரதம் என தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடக்கிறது. இதனிடையே இன்று முதல் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மாதந்தோறும் ரூ. 340 கட்டணம் வசூலிக்கப்பட்ட உள்ளது. உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு 50% கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுங்கக் கட்டணம் வசூலிக்கும் கவுண்ட்டர் முன் அமர்ந்து திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர் வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உள்ளூர் மக்களுக்கு அதிமுக சார்பில் ஆதரவு வழங்கப்பட்டது. போராட்டத்திற்கு அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆதரவளித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ள 10 கவுண்ட்டர்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. 

உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்புகின்றனர். தொடர்ந்து ஆர்.பி.உதயகுமாரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி உதயகுமார், தென்தமிழகத்தில் நுழைவுப் பகுதியான திருமங்கலம் தொகுதி கப்பலூர் டோல்கேட் விதிமுறை மீறி அமைக்கப்பட்டுள்ளது. இதை அகற்ற வேண்டும் என்று மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதே எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது ஸ்டாலின் நான் கப்பலூர் டோல்கேட்டை அகற்ற பாடுபடுவேன் என்று கூறினார். அதனுடைய வீடியோ குறிப்பு தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது. 3 ஆண்டுகள் ஆகியும் கொடுத்த வாக்குறுதியை பற்றி தற்போது வாய் திறக்க மறுத்து வருகிறார். இதுகுறித்து நாங்கள் போராடினால் எங்கள் மீது பொய் வழக்கு தொடுத்து கைது செய்யும் சூழ்நிலை உள்ளது என்றார்.
 
 தற்போது உள்ளூர் வாகன ஒட்டிகளுக்கு 2 லட்சம் முதல் 12 லட்சம் வரை அபதாரம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்பொழுது உள்ளூர் வாகனங்கள் 50% கட்டணத்துடன் செல்ல வேண்டும், என்று செய்தி வெளிவந்தது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அனைத்து மக்களும் போராட தூண்டும் வகையில் உள்ளது. இதே எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மத்திய அரசிடம் பேசி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டது. தற்பொழுது முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள், தொழிலாளர்கள், பல்வேறு சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் மக்களிடத்தில் அரசு அக்கறை செலுத்தவில்லை. இதன் மூலம் கடையடைப்பு போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.

ஏற்கனவே உள்ளூரில் சாலைகளை அடைத்தார்கள் மக்கள் போராட்டத்தின் பின்பு அது திறக்கப்பட்டது இந்த அரசு மக்கள் பிரச்னைக்கு அக்கறை செலுத்தவில்லை. மத்திய அரசு ஏற்கனவே 60 கிலோமீட்டர் உள்ள டோல்கேட்டை அகற்றப்படும் என்று கூறியுள்ளார்கள். அதை பயன்படுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து செய்திருக்க வேண்டும், ஆனால் அதை அரசு செய்யவில்லை. கப்பலூர் டோல்கேட் அகற்ற பலமுறை அரசுக்கு கவனத்திற்கு எடுத்துச் சென்றும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை. 

கப்பலூர் டோல்கேட் பிரச்னையில் நாங்கள் மக்களுக்கு உறுதுணையாக  எடப்பாடியாரிடம் அனுமதி பெற்று மக்களுடன் இணைந்து, போராட்டங்களுக்கு நாங்கள் இணைந்து தீர்வு காண போராடுவோம். ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சும், ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு என்பது போல உள்ளது என்று கூறினார். தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.பி உதயகுமார் உள்ளிட்ட ஏராளமானோரை காவல்துறையினர்  கைது செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow