கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்.. மத்திய அரசு கெஜட்டில் வெளியாகும் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவு நாணயத்திற்கு மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை அரசு கெஜட்டில் விரைந்து வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் நினைவு நாணயத்துடன், மேலும் இரண்டுநாணயத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

Jul 10, 2024 - 10:14
Jul 10, 2024 - 11:53
 0
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்.. மத்திய அரசு கெஜட்டில் வெளியாகும் அறிவிப்பு
Karunanidhi Centenary New Commemorative Coin

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான திமுகவின் தலைவருக்காக ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு விரும்பியது. இதற்காக, ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு சார்பில் கடந்த வருடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நாணயத்தை, கடந்த ஜூன் 3ஆம் தேதி கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் இருந்தது. இதன் பின்னணியில் நாணயத்திற்கான நடைமுறைகள் முடிவடையாதது காரணமானது. தற்போது இவை அனைத்தும் முடிந்து நேற்று நாணயத்திற்கான அனுமதியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்து போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவு நாணயத்துடன், மேலும் இரண்டு நாணயத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இதில், உச்ச நீதிமன்றத்தின் 75 ஆவது ஆண்டு - விழா மற்றும் மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் நூற்றாண்டு விழாவிற்கான நினைவு நாணயங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மு.கருணாநிதி உட்பட மூன்று நாணயங்கள் குறித்த உத்தரவை மத்திய அரசின் கெஜட்டிலும் விரைவில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மத்திய அரசால் நினைவு நாணயங்கள் வெளியிடும் முறை கடந்த 1964ஆம் ஆண்டில் துவங்கியது.இவற்றை மத்திய நிதி அமைச்சகத்தின் உத்தரவின்படி இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிடுகிறது. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின்பெயரில் முதல் நினைவு நாணயம் வெளியானது. இந்தநினைவு நாணயங்கள் முக்கியத்தலைவர்கள் மற்றும் நிகழ்வுகளுக்காக தொடர்ந்து வெளியாகின்றன. நினைவு நாணயத்திற்கான மாதிரி வரைபடம் விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து பெறப்படுகிறது. இதை வடிவமைக்கும் பணியை மத்திய நிதியமைச்சகம் செய்கிறது. இதனால், கருணாநிதி நாணயத்தின் மாதிரி வரைபடம் தமிழக அரசிடமிருந்து பெறப்பட்டது.இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி’ என்றபெயருடன், ‘தமிழ் வெல்லும்’ எனும் வாசகம் அவரது நினைவு நாணயத்தில் இடம்பெற உள்ளது.


தமிழ்நாட்டில் இதற்கு முன்னர் முன்னாள் முதல்வர்களான காமராஜர் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் தலைவர்கள் பல்வேறு கலைஞர்கள் உள்ளிட்டோர் மீதான பல நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுபோல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக தமிழ்நாடு அரசு சார்பில் கோரப்பட்ட நினைவு நாணயம் இன்னும் நிலுவையில் உள்ளது.கடந்த 2020ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்தபோது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா பெயரில் நினைவு நாணயம் வெளியிட மனு அளித்திருந்தார். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நாணயம் வெளியிட மத்திய அரசு தயங்கி வருவதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow