விஸ்வரூபம் எடுத்த சிலை கடத்தல் வழக்கு.. சிபிஐ வளையத்திற்குள் பொன் மாணிக்கவேல்...

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்து பல்வேறு சிலைகளை கண்டுபிடித்ததற்காக சென்னை உயர் நீதிமன்ற பாராட்டை பெற்ற ஓய்வு பெற்றவர் ஐஜி பொன் மாணிக்கவேல், மீது டெல்லி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Aug 10, 2024 - 21:41
Aug 10, 2024 - 21:52
 0
விஸ்வரூபம் எடுத்த சிலை கடத்தல் வழக்கு.. சிபிஐ வளையத்திற்குள் பொன் மாணிக்கவேல்...
ஐஜி பொன் மாணிக்கவேல், மீது டெல்லி சிபிஐ வழக்குப்பதிவு

இந்த வழக்குப்பதிவை அடிப்படையாகக் கொண்டு சனிக்கிழமை அன்று [10-08-2024] 7 அரை மணி நேரத்திற்கும் மேலாக டெல்லி இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழுவினர் சென்னை நீலாங்கரையை அடுத்த பாலவாக்கம் காமராஜர் சாலையில் உள்ள பொன் மாணிக்கவேல் வீட்டில் சோதனை மற்றும் விசாரணை நடத்தினர்.

கடந்த 2008ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆளடிப்பட்டி கிராமத்தில் அரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் அமைக்கும் பணியின்போது 6 சிலைகள் கிடைத்துள்ளன. இந்த சிலைகளை கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., காதர் பாஷா, காவலர் சுப்பராஜ் ஆகியோர் சிலைக்கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய தீனதயாளனின் உதவியோடு, சிலைகளை விற்று பணத்தை எடுத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.  

சிலையை கடத்தி விற்பனை செய்ததாக டி.எஸ்.பி. காதர் பாட்ஷா, கோயம்பேடு சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஆகியோர் மீது குற்றசாட்டு எழுந்து. இதனையடுத்து, 2017ம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி காதர் பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின், நெல்லை கோயில் சிலைகள் கடந்த 2007ம் ஆண்டு வெளிநாடுகளில் விற்கப்பட்டதாக தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் டி.எஸ்.பி காதர் பாட்ஷாவுக்கு தொடர்பிருப்பதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, அவர் 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் காதர் பாட்ஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அதில், பொன்.மாணிக்கவேல் பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ததாக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், பழவூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து கொண்டதுடன் மட்டுமல்லாமல் அதற்கு இடைஞ்சலாக இருந்த தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ததாகவும், ஜாமீனில் விடுதலையான தன்னை மற்றொரு பொய் வழக்கில் சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் காதர் பாட்ஷா குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், உயர் நீதிமன்றத்தையும், சிறப்பு நீதிமன்றத்தையும் தவறாக பயன்படுத்திய பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்துறை செயலாளருக்கும், டி.ஜி.பி.,க்கும் மனு அளித்ததாகவும், மேலும், நடவடிக்கை எடுக்காததால் தன் புகாரின் அடிப்படையில் பொன் மாணிக்கவேல் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ஓய்வுபெற்ற ஜஜி பொன் மாணிக்கவேல் மீதான புகார் மீது சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து டெல்லி சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஓய்வு பெற்ற டிஎஸ்பி காதர் பாட்ஷா மற்றும் காவலர் சுப்புராஜ் மீது போடப்பட்ட வழக்கை அடிப்படையாக வைத்து சிபிஐ முதல் தகவல் அறிக்கையை 2023 ம் ஆண்டு பதிவு செய்தது.

ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் மற்றும் ஓய்வு பெற்ற டிஎஸ்பி காதர் பாட்ஷா இருவரில் யார் குற்றவாளிகள் என்பதை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் அதன் உண்மைத்தண்மை குறித்து சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் வைத்து விசாரணை நடத்தி சென்றுள்ளனர். சோதனை முடிந்த பிறகு கட்டுக்கட்டாக ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

குறிப்பாக டிஎஸ்பி காதர் பாட்ஷா இது 2008 மற்றும் 2019 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இரண்டு வழக்கு பதிவுகள் பதிவு செய்யப்பட்டது குறித்து விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இரண்டு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஆவணங்களை அடிப்படையாக வைத்து இந்த விசாரணையானது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. 

குறிப்பாக 2022 ம் ஆண்டு உயிரிழந்த சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு, பொன் மாணிக்கவேல் தான் உதவி செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சோதனை முடிந்த பிறகு வெளியே வந்த பொன் மாணிக்கவேல், தன்னை சிபிஐ அதிகாரிகள் நேர்மை அதிகாரி என பாராட்டியதாகவும், தான் வைத்து இருந்த ஆவணங்கள் அனைத்தையும் கொடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த போது கைது செய்த சிலை கடத்தல்க்காரர்களும், டிஎஸ்பி காதர் பாட்சாவும் கூட்டு சேர்ந்து தன் மீது பொய் குற்றச்சாட்டை வைத்துள்ளதாக பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். மேலும் தான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருக்கும் போது எந்த சிலைகளுளேள் வெளிநாட்டில் கடத்தப்படவில்லை என்றும் பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சஸ்பெண்டு போலீஸ் டிஎஸ்பியான காதர் பாட்ஷாவின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அவரது தரப்பு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இன்பெண்ட் தினேஷ், செய்தியாளர்களை சந்தித்த போது பொன் மாணிக்கவேல் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். டிஎஸ்பி கார் பாட்சா மீது பொய் வழக்குகளை போட்டது பொன் மாணிக்கவேல் என்றும், அவர் சிபிஐ கண்டு பயப்படுகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொன் மாணிக்கவேல் சிபிஐ மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அதனால் தான் அவரது வீட்டில் சோதனையே நடந்துள்ளதாகவும் காதர் பாட்சா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த போதும் கூட பல்வேறு சர்ச்சை வலையில் சிக்கிய பொன் மாணிக்கவேல், ஓய்வு பெற்ற பிறகும் அந்த வலையில் இருந்து வெளியே வர முடியவில்லை. தற்போது சிபிஐ விசாரணை வளையத்திற்குள் அவர் சிக்கி இருப்பது தமிழக காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow