தமிழ்நாடு

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. ரூ.38 கோடி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பி.எப், கிராஜுவிட்டி மற்றும் விடுப்பு சம்பளம் உள்ளிட்ட ஓய்வூதிய பணப் பலன்கள் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன. ஓய்வூதிய பணப் பலன்களை வழங்கக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம்.

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. ரூ.38 கோடி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!
Tamilnadu Government

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் 1.30 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, விழுப்புரம், கும்பகோணம், சேலம் ஆகிய போக்குவரத்து கோட்டங்கள் உள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பி.எப், கிராஜுவிட்டி மற்றும் விடுப்பு சம்பளம் உள்ளிட்ட ஓய்வூதிய பணப் பலன்கள் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன. ஓய்வூதிய பணப் பலன்களை வழங்கக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம்.

சில நேரங்களில் இதே கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபடுவார்கள். அப்போது அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அரசு, போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கைக்கு செவிமடுப்பதாக உறுதி அளிக்கும். ஆனால் அதன்பிறகு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தவறி விடும்.

தமிழ்நாட்டில் அதிமுக, திமுக என ஆட்சி மாறிக் கொண்டே இருந்தாலும், அரசு போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இதுவரை ஓய்வூதிய பணப் பலன்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க தமிழக அரசு ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ''தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை உயிரிழந்த தொழிலாளர்களுக்கு ஓய்வுக் கால பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டியுள்ளது.

பணப்பலனில் ஒரு பகுதியை (50 சதவீத பி.எப்.) வழங்க ரூ.38.73 கோடி தேவைப்படுகிறது. இதில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.9.6 கோடியும், விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.1.1 கோடியும், விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.5.8 கோடியும், சேலம் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.3.6 கோடியும், கோவை போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.4.3 கோடியும், கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.8 கோடியும், மதுரை போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.3.2 கோடியும், திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.2.9 கோடியும் வழங்க வேண்டும்.

இதற்காக அரசு நிதி வழங்க வேண்டும் என போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகத்திலிருந்து கடிதம் பெறப்பட்டது. இதை கவனமாக பரிசீலித்த அரசு, ரூ.38 கோடியே 73 லட்சத்து 65 ஆயிரம் ஒதுக்கி ஆணையிடுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.