பயந்து விட்டோம்.. என்ன நடக்கிறது என்று தெரியாது... வங்கதேசத்தில் இருந்து தாயகம் திரும்பிய மாணவி

Tamil Nadu Students Return From Bangladesh : வீடுகளை தொடர்பு கொள்ள முடியாத நிலை. இதனால் பயந்து விட்டோம். மற்ற பகுதியில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது என்று வங்கதேசத்தில் இருந்து தாயகம் திரும்பிய மாணவி தெரிவித்துள்ளார்.

Jul 23, 2024 - 11:54
Jul 23, 2024 - 16:20
 0
பயந்து விட்டோம்.. என்ன நடக்கிறது என்று தெரியாது... வங்கதேசத்தில் இருந்து தாயகம் திரும்பிய மாணவி
Tamil Nadu Students Return From Bangladesh

Tamil Nadu Students Return From Bangladesh : வங்கதேசத்தில் வேலை வாய்ப்பு இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் மற்றும் கலவரம் நடந்து வருகிறது. இதனால் இந்தியாவில் இருந்து மருத்துவம் படிக்க சென்ற மாணவர்கள் பாதிப்புக்குள்ளானார்கள். இந்திய எல்லை அருகே உள்ள நகரங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் தூதரக அதிகாரிகள் முலம் இந்திய எல்லைக்கு அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமிழக மாணவர்கள்  தாயகம் திரும்ப இயலாத சூழலில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் முலம்  வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழுக்கள் அமைத்து அங்குள்ள தமிழ் மாணவர்களிடம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு அழைத்து வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையடுத்து வங்கதேசத்தில் இருந்து முதல் நாள் 49 மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். 2வது நாளாக கிருஷ்ணகிரி, கடலூர், தர்மபுரி, தஞ்சாவூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், ஈரோடு, விழுப்புரம், தென்காசி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 82 மாணவர்கள் கொல்கத்தா, கவுகாத்தி, அகர்தலா ஆகிய பகுதிகளின் விமான நிலையங்களில் இருந்து தமிழ்நாடு அரசு செலவில் விமானம் முலம் சென்னை வந்தனர்.

சென்னை விமான நிலையம் வந்த மாணவர்களை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அயலகத் தமிழர் நலத்துறை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, துணை கமிஷனர் ரமேஷ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அனைவரையும் அவர்களது சொந்த ஊர்களுக்கு வாகனங்கள் முலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வங்கதேசத்தில் படிக்க சென்ற மாணவர்களை முதலமைச்சர் உத்தரவிட்டதால் தமிழக மாணவர்களை அழைத்து வரப்பட்டு உள்ளனர். கலவரம், போராட்டம் காரணமாக அச்சத்தினால் வர விரும்பு கூடிய மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர். கல்வி தடைப்பட்டு வரவில்லை. போராட்டம் காரணமாக வந்து உள்ளனர். வங்கதேசத்தில் சாதாரண நிலை ஏற்பட்டதும் மீண்டும் படிக்க செல்ல கூடும். பதற்றத்தில் உள்ள மாணவர்களை அழைத்து வர தாய் உள்ளத்துடன் அரசு செய்கிறது.

மாணவர்கள் தொடர்பு கொள்ள இந்திய தூதரக முலம் 2 பேர் உள்ளனர். டாக்காவில் உள்ள மாணவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என தூதரகம் முலம் கல்லூரிகளுக்கு தகவல் தரப்பட்டு உள்ளது” என்று கூறினார்.

சென்னை திரும்பிய விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மாணவர் நிதிஷ் கண்ணா கூறுகையில், "வங்கதேசத்தில் இருந்து எல்லை கடந்து வந்தோம். விமான கட்டணங்கள் அதிகமாக இருந்ததால் எப்படி சென்னை வருவது என தெரியாமல் இருந்ததோம். அப்போது தமிழக அரசின் உதவி மையத்திற்கு தொடர்பு கொண்டதும் விமான டிக்கெட் வழங்கினார்கள். உணவு எல்லாமே தமிழக அரசே வழங்கியது.

வங்கதேசத்தின் போக்ரா பகுதியில் பிரச்சனைகள் இருந்தது. கல்லூரி நிர்வாகம் எங்களை பாதுகாப்பாக பார்த்து கொண்டது. வீடுகளை தொடர்பு கொள்ள முடியாத நிலை. இதனால் பயந்து விட்டோம். மற்ற பகுதியில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது. எங்களை பாதுகாப்பாக மீட்டு அழைத்து வந்த முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். வங்கதேசத்தில் பிரச்சனை முடிந்ததும் மீண்டும் படிக்க செல்வோம்” என்றார்.

சேலத்தை சேர்ந்த மாணவி ஜெனனி பிரியா கூறுகையில், "எங்கள் கல்லூரிக்குள் எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் கல்லூரியை சுற்றி போராட்டங்கள் நடந்தது. கல்லூரி விடுதியில் பாதுகாப்பாக இருந்தோம். எல்லையை கடந்த பின்னர் தான் இணையதள வசதி கிடைத்தது. உணவு, டிக்கெட் வசதி செய்து தந்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்" என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow